ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் விவாதத்தில் பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின் கலந்து கொள்கிறார்


ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் விவாதத்தில் பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின் கலந்து கொள்கிறார்
x
தினத்தந்தி 9 Aug 2021 1:50 AM GMT (Updated: 2021-08-09T07:28:58+05:30)

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் கடல் பாதுகாப்பு குறித்த வெளிப்படையான விவாதத்தில் பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் ஆகஸ்டு மாதத்துக்கான தலைமை பொறுப்பை  இந்தியா ஏற்றுக்கொண்டது. ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மரில் ஏற்பட்டு உள்ள பதற்றத்திற்கு மத்தியில் இந்த மாதத்திற்கான ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக இந்தியா உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தலைமை தாங்குவார்.

ரஷியாவில் உள்ள இந்திய தூதரகம், அதிபர் புதின் வீடியோ கான்பரன்சிங் மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று அறிவித்துள்ளது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடல் பாதுகாப்பு குறித்த வெளிப்படையான விவாதத்தில் கலந்து கொள்வார்.

தற்போதைய  ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின்  தலைமை பொறுப்பில்  இந்தியா எட்டாவது முறையாக உள்ளது. கடைசியாக 2011-12ல் இந்தியா 10 வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தை பிடித்தது. 1950-51, 1967-68, 1972-73, 1977-78, 1984-'85 மற்றும் 1991-92 ஆகிய காலகட்டங்களில் இதே போன்ற தலைமை வழங்கப்பட்டன.  அந்த கால கட்டங்களில் நெருக்கடிகளைத் தீர்ப்பதில் இந்தியாவின் பங்கு அதிகரித்து இருந்தது.

கடல்சாா் பாதுகாப்பு தொடா்பான பல்வேறு தீா்மானங்கள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. எனினும், கடல்சாா் பாதுகாப்புக்கென பிரத்யேகமாக விவாதக் கூட்டம் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். கடல்சாா் பாதுகாப்பு குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.

இது தொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சாா்பில் நடைபெறும் விவாதக் கூட்டத்துக்குத் தலைமையேற்கும் முதல் இந்தியப் பிரதமா் என்ற சிறப்பை நரேந்திர மோடி பெறுகிறாா். கடல்சாா் குற்றங்களைத் தடுத்தல், கடல்சாா் பாதுகாப்பில் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை அதிகரித்தல் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தின்போது விவாதிக்கப்படவுள்ளது.

கடல்சாா் பாதுகாப்பில் எந்தவொரு நாடும் தனித்துச் செயல்பட முடியாது. கடல் போக்குவரத்தில் காணப்படும் அச்சுறுத்தல்களையும் அவற்றை எதிா்கொள்ளும் முறைகளையும் விரிவாக விவாதிப்பதற்கு இந்தக் கூட்டம் உதவும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளின் தலைவா்கள், ஐ.நா. அமைப்பின் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story