எண்ணெய் பத்திரத்தில் மத்திய அரசு பொய் சொல்கிறது; புள்ளி விவரங்களுடன் காங்கிரஸ் புகார்


எண்ணெய் பத்திரத்தில் மத்திய அரசு பொய் சொல்கிறது; புள்ளி விவரங்களுடன் காங்கிரஸ் புகார்
x
தினத்தந்தி 18 Aug 2021 1:28 AM GMT (Updated: 18 Aug 2021 1:28 AM GMT)

எண்ணெய் பத்திர விவகாரத்தில் மத்திய அரசு பொய் சொல்வதாக புள்ளி விவரங்களுடன் காங்கிரஸ் புகார் கூறுகிறது.

செலவு எவ்வளவு?
காங்கிரஸ் ஆட்சியின்போது பெட்ரோல், டீசல் விலையை ஏற்றாமல் இருக்க, உற்பத்தி செலவுக்கும், விற்பனைக்கும் இடையேயான வித்தியாசத்தை சரிக்கட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு எண்ணெய் பத்திரங்களை அளித்திருந்ததாகவும், அதற்கு 5 ஆண்டுகளில் மோடி அரசு ரூ.60 ஆயிரம் கோடி வட்டி செலுத்தி இருப்பதாகவும், இன்னும் ரூ.1.30 லட்சம் கோடி பாக்கி இருப்பதாகவும், அதனால் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க முடியாது எனவும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறி இருந்தார்.

இதற்கு பதில் அளிக்கிற விதத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெட்ரோலிய பொருட்கள் மீது வசூலிக்கிற வரியில் வெறும் 3.2 சதவீதத்தைத்தான் மத்திய அரசு எண்ணெய் பத்திரங்கள் வகையில் செலவழிக்கிறது.

விலை உயர்வுக்கு காரணம்
பெட்ரோல் விலை உயர்வுக்கு உண்மையான காரணம், எண்ணெய் பத்திரங்கள் அல்ல, மானியத்தில் 12 மடங்கு குறைத்ததும், 3 மடங்கு வரி போட்டதும்தான்.2014-15-லிருந்து மத்திய அரசு எண்ணெய் பத்திரங்களுக்காக ரூ.73 ஆயிரத்து 440 கோடி செலவழித்திருக்கிறது. ஆனால் அவர்கள் பெட்ரோலிய பொருட்கள் மீது வரியாக ரூ.22 லட்சத்து 34 ஆயிரம் கோடி வசூலித்திருக்கிறார்கள்.2020-21-ல் மட்டுமே அரசு பெட்ரோல், டீசல் வரியாக ரூ.4 லட்சத்து 53 ஆயிரத்து 812 கோடி வசூலித்துள்ளது. இது 2013-14-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியில் இருந்த சமயத்தைவிட 3 மடங்கு அதிகம் ஆகும்.

7 வருடங்களில் கூட்டியது...
பெட்ரோல் மீது ரூ.23.87, டீசல் மீது ரூ.28.37 என 7 வருடங்களில் பா.ஜ.க. அரசு வரியைக்கூட்டி இருக்கிறது.அதிகாரபூர்வ தகவல்கள் படி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியமாக 2012-13-ல் ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 387 கோடியும், 2013-14-ல் ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்து 25 கோடியும் செலவிடப்பட்டது.தற்போதைய பா.ஜ.க. ஆட்சியில் அது ஆண்டு தோறும் குறைக்கப்பட்டு 2020-21-ல் ரூ.12 ஆயிரத்து 231 கோடியாக குறைந்துவிட்டது.கடந்த 15 மாதங்களில் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு முறையே ரூ.32.25, ரூ.27.58 உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் பத்திரத்தில் அரசு பொய் சொல்கிறது.எனவே மோடி அரசு உடனடியாக 2014 ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது இருந்த அளவுக்கு கலால் வரியை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story