பொது சேவையில் 20 ஆண்டுகள்; பிரதமர் மோடியை பராட்டி நிகழ்ச்சிகளை நடத்த பாஜக ஏற்பாடு


பொது சேவையில் 20 ஆண்டுகள்;  பிரதமர் மோடியை பராட்டி நிகழ்ச்சிகளை நடத்த  பாஜக ஏற்பாடு
x
தினத்தந்தி 4 Sep 2021 11:44 PM GMT (Updated: 4 Sep 2021 11:44 PM GMT)

பிரதமர் நரேந்திர மோடி பொது வாழ்க்கையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த  2001- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத் முதல் மந்திரியாக பொறுப்பேற்றார். அவர் பொதுச்சேவைக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவு ஆக உள்ளது. இதையடுத்து, பிரதமருக்கு நன்றி தெரிவித்து பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை நடத்த பாஜக முடிவு செய்துள்ளது.   இது தொடர்பாக கட்சியின் மாநில தலைவர்களுக்கு, தேசிய தலைவர் நட்டா கடிதம் எழுதியுள்ளார்.

அதில், பிரதமரின் 20 ஆண்டு பொது சேவையை பாராட்டும் வகையில், 20 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளை நாடு முழுதும் நடத்த வேண்டும். மோடியின் பிறந்த நாளான செப் 13 ஆம் தேதி  இது துவங்கப்படும். அவரை வாழ்த்தி ஐந்து கோடி தபால் கார்டுகளை கட்சியினர் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச உணவு மற்றும் தடுப்பூசி வழங்கியதற்கு நன்றி தெரிவித்து 'பேனர்'கள் வைக்க வேண்டும்.

அவரது சேவைகளை நினைவுபடுத்தும் வகையில் கண்காட்சிகள் நடத்த வேண்டும். மக்கள் பிரதிநிதிகள், தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று, ஏழைகளுக்கு இலவச உணவுப் பொருட்கள் வழங்குவது குறித்து விளக்கி, 'வீடியோ'வாக பதிவு செய்ய வேண்டும்.

 இளைஞர் பிரிவினர் இரத்த தான முகாம்கள் நடத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல், அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள உத்தர பிரதேசத்தில்,  71 இடங்களில் கங்கையை துாய்மை செய்யும் பிரசாரம் பாஜகவினரால் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story