மராட்டியத்தில் மந்திரி பதவி விலக காரணமான ஐ.பி.எஸ். அதிகாரி பரம்பீர் சிங் வெளிநாட்டுக்கு தப்பிஓட்டம்? பரபரப்பு தகவல்கள்

மந்திரி அனில் தேஷ்முக் ராஜினாமாவுக்கு காரணமாக இருந்த மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் வெளிநாட்டுக்கு தப்பிஓடி இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்தநிலையில் மும்பையில் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் சிக்கிய வழக்கு அரசியல் சூறாவளியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு விசாரணையை திசை திருப்பியதாக மும்பை போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்த பரம்பீர் சிங் கடந்த மார்ச் மாதம் ஊர்க்காவல் படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். இதையடுத்து மாநில உள்துறை மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக் மும்பையில் ஓட்டல், மதுபார்களிடம் இருந்து மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தரும்படி போலீசாரை கட்டாயப்படுத்தியதாக பரம்பீர் சிங் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இந்த மாமூல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து, அனில் தேஷ்முக் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். தேசியவாத காங்கிரசை சேர்ந்தவரான அனில் தேஷ்முக் மீது தற்போது சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.
இந்தநிலையில் மந்திரி பதவி விலக காரணமாக இருந்த ஐ.பி.எஸ். அதிகாரி பரம்பீர் சிங்கிற்கு எதிராக மிரட்டி பணம் பறித்ததாக பல்வேறு வழக்குகள் குவிந்தன. மேலும் எஸ்.சி., எஸ்டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதவிர அனில் தேஷ்முக் மீதான மாமூல் புகாரை விசாரித்து வரும் ஒருநபர் நீதி விசாரண கமிஷன் பல தடவை சம்மன் அனுப்பியும் பரம்பீர் சிங் ஆஜராகவில்லை.
இந்தநிலையில் வழக்குகளால் நெருக்கடியை சந்தித்து வரும் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி பரம்பீர் சிங் சமீப நாட்களாக தலைமறைவாகி இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர் வெளிநாடு தப்பி சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மராட்டிய உள்துறை மந்திரி திலீப் வல்சே பாட்டீலிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிளித்து கூறியதாவது:-
பரம்பீர் சிங் நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்னும் உறுதியான தகவல் இல்லை. அவர் அரசாங்க அதிகாரியாக இருப்பதால், வெளிநாடு செல்வதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன. அரசாங்க அனுமதியின்றி அவர் நாட்டை விட்டு வெளியேற முடியாது. அதை மீறி வெளியேறினால், அது நல்லதல்ல. பரம்பீர் சிங்கை கண்டுபிடிக்க மத்திய அரசுடன் தொடர்பில் உள்ளோம். மேலும் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க அவருக்கு எதிராக ஏற்கனவே லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மந்திரி ஒருவரின் ராஜினாமாவுக்கு காரணமாக இருந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிக்கு வழக்குகளால் நெருக்கடி ஏற்பட்டு, அவர் வெளிநாடு தப்பி சென்று இருக்கலாம் என்று கூறப்படுவது மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story