காங்கிரஸ் கட்சியை காந்தி குடும்பம் சீரழித்து விட்டது - மத்திய மந்திரி குற்றச்சாட்டு


காங்கிரஸ் கட்சியை காந்தி குடும்பம் சீரழித்து விட்டது - மத்திய மந்திரி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 Oct 2021 11:54 PM GMT (Updated: 1 Oct 2021 11:54 PM GMT)

காங்கிரஸ் கட்சியை காந்தி குடும்பம் சீரழித்து விட்டதாக மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

உள்கட்சி பூசல் காரணமாக பஞ்சாப் காங்கிரஸ் அரசில் தொடர்ந்து நெருக்கடி நிலவி வருகிறது. முதல்-மந்திரியாக இருந்த அமரிந்தர் சிங் ராஜினாமா, கட்சியில் இருந்து வெளியேறும் அவரது முடிவு, மாநில காங்கிரஸ் தலைவர் சித்து ராஜினாமா என மாநில அரசில் அடுத்தடுத்து புயல் வீசி வருகிறது.

இதைத்தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் காங்கிரஸ் தலைமையை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் இத்தகைய நெருக்கடிக்கு காந்தி (சோனியா) குடும்பம்தான் காரணம் என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான முக்தர் அப்பாஸ் நக்வி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஒரு பழமையான கட்சியை தங்கள் தனிப்பட்ட சொத்தாக மாற்றும் குழப்பத்தில் ஒரு குடும்பம் அதை முடக்கியுள்ளது. ஒருபுறம் அந்த கட்சி அரசியல் நெருக்கடி சுனாமியில் சிக்கியிருக்கிறது. மறுபுறம் விரக்தியடைந்த பிரபுத்துவ அதிகாரத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது’ என்று கூறினார்.

சிலர் எதிர்க்கட்சி தலைவர் ஆக விரும்புவதாகவும், ஆனால் அவர்களது கட்சி அவர்களின் கையில் இருந்து நழுவி விட்டதாகவும் கூறிய நக்வி, முரண்பாடுகள் மற்றும் குழப்பம் இல்லாத வலுவான எதிர்க்கட்சியையே விரும்புகிறோம் என்றும் கூறினார்.

Next Story