வெள்ளேரி கிராமத்தினருடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார்


வெள்ளேரி கிராமத்தினருடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார்
x
தினத்தந்தி 2 Oct 2021 7:27 AM GMT (Updated: 2 Oct 2021 7:27 AM GMT)

காந்தி ஜெயந்தியை ஒட்டி நாட்டில் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு பெற்ற கிராமத்தினருடன் பிரதமர் உரையாடினார்.

திருவண்ணாமலை,

காந்தி ஜெயந்தியை ஒட்டி நாட்டில் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு பெற்ற கிராமத்தினருடன் பிரதமர் உரையாடினார். மணிப்பூர், குஜராத், உத்தரகண்ட், உ.பி மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் மோடி இன்று உரையாற்றினார். 

அதன்படி,  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள வெள்ளேரி கிராமத்தினருடன் பிரதமர் மோடி இன்று நண்பகல்  காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார். 

வெள்ளேரி ஊராட்சி தலைவர் சுதாவிடம் “ஆரணி பட்டு பிரசித்தி பெற்றது என கூறுவார்கள்; குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால் பட்டு தறி நெய்வதற்கு நேரம் கிடைக்கும் அல்லவா”  என்று பிரதமர் மோடி  கேட்டறிந்தார்.

மேலும் பிரதமர் பேசுகையில், நாட்டில் ஏறத்தாழ 2 லட்சம் கிராமங்கள் கழிவுகள் மேலாண்மை முறையை தொடங்கிவிட்டன. 40 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்துள்ளன.

காதி மற்றும் கைவினைப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளன. ஆத்மநிர்பார் நிகழ்ச்சி மூலம் நாடு முன்னோக்கி செல்கிறது. இவ்வாறு தனது உரையில் கூறியுள்ளார்.

2024ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் படி குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விட்ட நிலையில், வெள்ளேரி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. அங்கு மொத்தம் 414 வீடுகள் உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அரசியல் தலைவர்கள்,பொதுமக்கள்  உட்பட பலர் பங்கேற்றனர்.


Next Story