திருப்பதி பிரம்மோற்சவம்: தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே அனுமதி


திருப்பதி பிரம்மோற்சவம்: தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே அனுமதி
x
தினத்தந்தி 3 Oct 2021 10:27 AM GMT (Updated: 3 Oct 2021 10:27 AM GMT)

வருடாந்திர பிரம்மோற்சவ நேரத்தில் தரிசன டிக்கெட் இல்லாதவர்களுக்கு திருமலை செல்ல அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருமலை,

திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான அதிகாரிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்திய பின், திருப்பதி எஸ்.பி வெங்கட அப்பலநாயுடு கூறியதாவது:

திருமலையில் வரும் 7ல் துவங்கி, அக்., 11ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தின் போது பல்வேறு துவக்க நிகழ்ச்சிகள், பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் உள்ளிட்டவற்றில் பங்கேற்க ஆந்திர, கர்நாடக மாநில முதல்-மந்திரிகள்  திருமலைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அதிக அளவில் பக்தர்கள் கூடுவதால் கொரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, தேவஸ்தான ஊழியர்கள், பக்தர்கள் உள்ளிட்டோரின் நலன்களை கருத்தில் வைத்து தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். 

தரிசன டிக்கெட் பெற்றவர்கள் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணிநேரத்திற்கு முன்பு செய்து கொண்ட பரிசோதனையின் 'நெகடிவ்' சான்றிதழ் உள்ளிட்டவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story