ஆங்கிலேயர்கள் கூட இதுபோன்ற அராஜகங்களில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள் - அகிலேஷ் விமர்சனம்


ஆங்கிலேயர்கள் கூட இதுபோன்ற அராஜகங்களில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள் - அகிலேஷ் விமர்சனம்
x
தினத்தந்தி 4 Oct 2021 6:09 AM GMT (Updated: 2021-10-04T11:52:15+05:30)

ஆங்கிலேயர்கள் கூட இது போன்ற அராஜகங்களில் ஈடுபட்டிருக்கமாட்டர்கள் என்று உத்தரபிரதேச அரசு மீது அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்துள்ளார்.

லக்னோ,

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையில், மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா லகிம்பூர் கேரி மாவட்டத்தின் திகுனியா அருகே உள்ள பன்வீர்பூரை சேர்ந்தவர் ஆவார். இந்த கிராமத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக உத்தரபிரதேச துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

எனவே அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியா என்ற இடத்தில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பா.ஜ.க- வினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். 

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பா.ஜ.க.வினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதனால், அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 

இதற்கிடையில், விவசாயிகள் மீது மோதிய காரில் உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், அந்த குற்றச்சாட்டை அஜய் மிஸ்ரா மறுத்துள்ளார்.

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று தனது வீட்டில் இருந்து வன்முறை நடைபெற்ற லகிம்பூர் கேரி மாவட்டம் திகுனியாவுக்கு செல்ல முற்பட்டார். ஆனால், அவரை வீட்டிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து, அவர் தனது வீட்டின் முன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், விவசாயிகள் மீது உத்தரபிரதேச அரசு மேற்கொள்ளும் அராஜகங்களில் பிரிட்டிஷார் கூட ஈடுபட்டிருக்கமாட்டார்கள். மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா மற்றும் உ.பி. துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா 2 கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் குடுமத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’ என்றார்.  

லகிம்பூர் கேரி வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்பட 15 பேர் மீது கொலை மற்றும் வன்முறையைத் தூண்டியதற்காக உத்தரப்பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story