கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்" எச்சரிக்கை!

கேரளாவில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவின் தென்கிழக்கு அரபி கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. தொடர் மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
பலத்த மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி உடனடியாக நடந்தாலும் இன்னும் 22 பேரை காணவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மழைக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
அங்கு கடற்படை மற்றும் ராணுவத்தினர் மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அங்கு வருவாய்த்துறை அதிகாரிகள் முகாமிட்டு உள்ளனர். அவர்கள் மீட்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
மேலும் ராணுவ ஹெலி காப்டர்களும் மோசமான வானிலை காரணமாக அந்த பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இன்று காலையில் மழை சற்று குறைந்ததும் பேரிடர் மீட்பு குழுவினர் அங்குச் சென்று நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்டு வருகிறார்கள். கேரளாவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த நிலையில், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களில் கனமழை பதிவாக வாய்ப்பிருப்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story