உத்தரபிரதேசத்தில் கோர்ட்டு வளாகத்தில் வழக்கறிஞர் சுட்டுக்கொலை


உத்தரபிரதேசத்தில் கோர்ட்டு வளாகத்தில் வழக்கறிஞர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 18 Oct 2021 9:31 AM GMT (Updated: 18 Oct 2021 9:31 AM GMT)

உத்தரபிரதேசம் ஷாஜகான்பூரில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேசம் ஷாஜகான்பூரில் உள்ள மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பின்னர், அவர் வழக்கறிஞர் பூபேந்திர சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளளார். .அவரது உடல் கோர்ட்டு  வளாகத்தின் மூன்றாவது மாடியில் கண்டுபிடிக்கப்பட்டது.

எனினும் கிடைத்த தகவல்களின் படி, வழக்கறிஞர் பூபேந்திர சிங் கோர்ட்டின் மூன்றாவது மாடியில் உள்ள ஏசிஜே எம்அலுவலகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும்,அவரது சடலத்தின் அருகே நாட்டு கைத்துப்பாக்கி காணப்பட்டதாகவும்,சம்பவத்தின் போது அலுவலகத்தில் அவருடன் யாரும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,இது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில்:"எங்களுக்கு கொலை சம்பவம் குறித்து விவரம் ஏதும் தெரியாது. நாங்கள் கோர்ட்டில் தான் இருந்தோம், ஒருவர் வந்து எங்களிடம் வழக்கறிஞர் ஒருவர் சுடப்பட்டு கொல்லப்பட்டதாக கூறினார். நாங்கள் சென்று பார்க்கும் போது அவர் உயிரிழந்து விட்டார் என்பதும், அருகில் ஒரு நாட்டுத் துப்பாக்கியையும் கண்டோம். ",என்று தெரிவித்தார்.

இதற்கிடையில்,இது குறித்த தகவல் கிடைத்தவுடன் எஸ்பி எஸ் ஆனந்த், டிஎம் இந்தர் விக்ரம் சிங் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று வந்து விசாரணை நடத்தினர். மேலும்,கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து விவரம் அறிய சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

கோர்ட்டு வளாகத்தில் வழக்கறிஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சக வழக்கறிஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story