கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழ சித்தராமையாவே காரணம்: தேவேகவுடா


கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழ சித்தராமையாவே காரணம்: தேவேகவுடா
x
தினத்தந்தி 23 Oct 2021 8:02 PM GMT (Updated: 23 Oct 2021 8:02 PM GMT)

காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியதால் ஆட்சி அமைத்தோம் என்றும், கூட்டணி அரசு கவிழ சித்தராமையாவே காரணம் என்றும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

தேவேகவுடா பிரசாரம்

கர்நாடகத்தில் காலியாக உள்ள விஜயாப்புரா மாவட்டம் சிந்தகிக்கு வருகிற 30-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சிந்தகி தொகுதியில் போட்டியிடும் ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளரை ஆதரித்து நேற்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா பிரசாரம் மேற்கொண்டார்.

முன்னதாக சிந்தகியில் நேற்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

சித்தராமையாவே காரணம்

கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. காங்கிரசுடன் கூட்டணி அமைக்க எனக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்கட்டும், நாங்கள் ஆதரவு அளிக்கிறோம் என கூறினார்கள்.

காங்கிரஸ் தலைவர்களின் வலியுறுத்தல் காரணமாக தான், அவர்களுடன் ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. கூட்டணி அரசு அமைந்ததில் இருந்தே, அந்த அரசை கவிழ்க்க சித்தராமையா அனைத்து வித முயற்சிகளையும் எடுத்தார். காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ சித்தராமையாவே காரணம்.

கட்சியை யாராலும் அழிக்க...

சிந்தகி, ஹனகல் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு சித்தராமையா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. ஜனதாதளம் (எஸ்) கட்சியை யாராலும் அழிக்க முடியாது. எங்கள் கட்சியை அழிக்க நினைப்பவர்களின் கனவு நிறைவேறாது.

2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தோ்தலில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே ஜனதாதளம் (எஸ்) கட்சியின் நோக்கமாகும். அதற்காக தான் இப்போதில் இருந்தே தயாராகி வருகிறோம். மாநில கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும். தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜனதாவை மக்கள் புறக்கணிக்க தயாராகி விட்டனர்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.


Next Story