ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதா? சாட்சியாக சேர்க்கப்பட்டவர் குற்றச்சாட்டு
கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பறிமுதல் செய்த வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
மும்பையில் கோவா மாநிலத்திற்கு சென்ற சொகுசுக் கப்பலில், போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில், பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த வழக்கில், தனியார் புலனாய்வாளர் கே.பி.கோசவி மற்றும் அவரது உதவியாளர் பிரபாகர் செயில் ஆகியோர் சாட்சியாக சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில், சாட்சியமாக சேர்க்கப்பட்ட பிரபாகர் செயில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபாகர் செயில் கூறுகையில், “ போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தன்னிடம் 9 முதல் 10 வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கினர். அதேபோல் என்.சி.பி அதிகாரிகள் மற்றும் மேலும் சிலரும் ஆர்யன் கான் வழக்கு தொடர்பாக அவரது தந்தை ஷாருக்கானிடம் ரூ.25 கோடி பேரம் பேசினர்” என்றார். பிரபாகர் செயிலின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
விசாரணை அமைப்பின் பெயரை கெடுப்பதற்காக இந்த குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா உள்ளது. அதனால், அது போன்ற குற்றச்சாட்டுகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story