சிறிய அளவில் போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமாக்கக் கூடாது: மத்திய சமூக நீதி அமைச்சகம்


சிறிய அளவில் போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமாக்கக் கூடாது: மத்திய சமூக நீதி அமைச்சகம்
x
தினத்தந்தி 24 Oct 2021 6:10 PM GMT (Updated: 24 Oct 2021 6:10 PM GMT)

சொந்த உபயோகத்துக்காக சிறிய அளவில் போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமாக்கக் கூடாது என்று மத்திய சமூக நீதி அமைச்சகம் சிபாரிசு செய்துள்ளது.

ஷாருக்கான் மகன்

இந்தியாவில், போதைப்பொருள் வைத்திருப்பது குற்றமாகும். போதைப்பொருட்களை பயன்படுத்துபவருக்கு போதைப்பொருள் மற்றும் மனநோய் மருந்துகள் சட்டத்தின் 27-வது பிரிவின்படி, ஓராண்டுவரை சிறைத்தண்டனையோ, ரூ.20 ஆயிரம்வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படுகிறது. பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் இந்த சட்டப்பிரிவில்தான் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் சட்டப்படி, யாருக்கும் விலக்கு கிடையாது. பிடிபட்டவர் மறுவாழ்வு நடவடிக்கைக்கு தானாக முன்வந்து சம்மதித்தால், அவர் வழக்கு மற்றும் சிறை நடவடிக்கையில் இருந்து விலக்கு பெறலாம்.

கட்டாய சிகிச்சை

இந்தநிலையில், இந்த சட்டம் குறித்து மத்திய சமூக நீதி அமைச்சகம், வருவாய் துறைக்கு ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், தனிப்பட்ட உபயோகத்துக்காக சிறிய அளவில் போதைப்பொருள் வைத்திருப்பதை குற்ற பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அதற்கேற்ப சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் சிபாரிசு செய்துள்ளது. அப்படி சிறிய அளவில் போதைப்பொருள் வைத்திருந்து பிடிபட்டவர்களை சிறையில் தள்ளாமல் அரசு மையங்களில் கட்டாய சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

சினிமா பிரபலங்கள்

தெலுங்கு, இந்தி திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது. முன்னணி நடிகர், நடிகைகள் விசாரணையை எதிர் கொண்டுள்ளனர். அத்துடன், நடிகர் ஷாருக்கான் மகன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் சிபாரிசு வெளிவந்துள்ளது.


Next Story