லகிம்பூர் வழக்கு: வெறும் 23 பேர்தான் சாட்சிகளா...? உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி


லகிம்பூர் வழக்கு: வெறும் 23 பேர்தான் சாட்சிகளா...?  உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
x
தினத்தந்தி 26 Oct 2021 7:57 AM GMT (Updated: 26 Oct 2021 11:40 AM GMT)

லகிம்பூர் வன்முறை வழக்கு இன்று தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோலி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

புதுடெல்லி

உத்தரபிரதேச மாநிலத்தின் லகிம்பூர் கெரி மாவட்டத்தின் லகிம்பூரில் கடந்த  மாதம் 10-ந் தேதி பா.ஜ.க.வினர் சென்ற கார் விவசாயிகள் மீது மோதியது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள், பத்திரிக்கையாளர்  ஒருவர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்  விசாரித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்  அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், அக்டோபர் 11ம் தேதி ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யபட்டார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோலி அடங்கிய அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது.  வழக்கின் நிலை குறித்த 2வது அறிக்கையை உத்தரப் பிரதேச அரசு தாக்கல் செய்தது. உத்தரப்பிரதேச அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, 68 சாட்சிகளில் 30 சாட்சிகள் என்றும்  தெரிவித்தார்.

அப்போது, நூற்றுக்கணக்கான விவசாயிகள் பேரணியில் பங்கேற்றிருந்தபோது வெறும் 23 பேர்தான் நேரில் கண்ட சாட்சிகளா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த சம்பவத்தின்போது ஆயிரக்கணக்கான மக்கள் இருந்துள்ளனர் . அவர்கள் அனைவரும் உள்ளூர் மக்கள், சம்பவத்திற்கு பின்னர் நீதி வேண்டும் என்று அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். எனவே, அவர்களை அடையாளம் காண்பது கடினமல்ல.

விசாரணை குழு மேலும் அதிகமான நேரடி சாட்சிகளை கண்டறிய வேண்டும் என்று தெரிவித்தது. வழக்கின் வீடியோ ஆதாரங்களை தடயவியல் ஆய்வகங்கள் விரைவாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்ற அமர்வு வாய்மொழியாக கூறியது. சாட்சிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Next Story