பெகாசஸ் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு காங்கிரஸ் வரவேற்பு


பெகாசஸ் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு காங்கிரஸ் வரவேற்பு
x
தினத்தந்தி 27 Oct 2021 7:20 AM GMT (Updated: 27 Oct 2021 7:20 AM GMT)

பெகாசஸ் மென்பொருள் முக்கிய நபர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டது தொடர்பாக, விசாரணை கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது.

புதுடெல்லி,

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியைக் கொண்டு சிறப்பு நிபுணர் குழு அமைக்க கோரிய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்,  3 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  

மேலும் இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள் அமர்வு, “இந்தியாவின் ரகசியத்தை காப்பது முக்கியம். தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவு தனிமனித உரிமைகளும் முக்கியம். பத்திரிக்கையாளர் மட்டுமின்றி அனைத்து மக்களின் தனிநபர் ரகசியங்களும் காக்கப்பட வேண்டும். சிறப்பு நிபுணர் குழுவின் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு நேரடியாக கண்காணிக்கும்” என்று தெரிவித்தனர். 

இதன்படி ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆர்.வி.ரவீந்தரன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் ரா பிரிவின் முன்னாள் இயக்குனர் அலோக் ஜோஷி, தொழில்நுட்ப வல்லுநர் சந்தீப் ஒபராய் ஆகியோர் சிறப்பு நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். 

காங்கிரஸ் வரவேற்பு

இந்த நிலையில்,  பெகாசஸ் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்  ரன்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “  கோழைத்தனமான பாசிஸ்டுகளின் கடைசி புகலிடம் போலி தேசியவாதமாகத்தான் உள்ளது.  

பெகாசஸ் மென்பொருளை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம்.  தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் இந்த விவகரத்தை திசை திருப்பி தப்பிக்க   மோடி அரசு கடுமையான முயற்சி மேற்கொண்டது. வாய்மையே வெல்லும்” எனப்பதிவிட்டுள்ளார். 

Next Story