தொழிலாளி மகள் சிகிச்சைக்கு ரூ.16 கோடி: ஒரே காசோலையில் வழங்கிய நிறுவனம்..!


தொழிலாளி மகள் சிகிச்சைக்கு ரூ.16 கோடி: ஒரே காசோலையில் வழங்கிய நிறுவனம்..!
x
தினத்தந்தி 21 Nov 2021 12:37 AM GMT (Updated: 21 Nov 2021 12:37 AM GMT)

அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளி மகள் சிகிச்சைக்கு ரூ.16 கோடியை ஒரே காசோலையில் நிறுவனம் ஒன்று வழங்கியது.

ராய்ப்பூர், 

சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள சவுத் ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் நிறுவனத்தின் (பொதுத்துறை) தொழிலாளி சதீஷ் குமார் ரவி. இவரது 2 வயது மகள் சிருஷ்டி ராணி மிகவும் அபூர்வமான முதுகெலும்பு தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நோய் தாக்கினால் முதுகுத்தண்டு மற்றும் மூளைத்தண்டில் உள்ள நரம்பு செல்கள் இழப்பால், தசைகளின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய் விடும். இது மரபணு கோளாறு என்று சொல்லப்படுகிறது.

இந்த கோளாறுக்காக சிருஷ்டி ராணி, டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மற்றும் பிலாஸ்பூர் அப்பல்லோ ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார். தற்போது அவர் திப்காவில் உள்ள வீட்டில் வென்டிலேட்டர் துணையுடன் சிகிச்சை பெறுகிறார்.

அவருக்கு தற்போது ‘ஜேர்ஜென்ஸ்மா’ என்ற ஊசி மருந்தை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து செலுத்த வேண்டுமாம். இந்த ஊசி மருந்தின் விலை ரூ.16 கோடி ஆகும். இதுகுறித்து சதீஷ் குமார் ரவி தனது நிறுவனத்திடம் முறையிட்டார்.

இதையடுத்து ரூ.16 கோடிக்கான காசோலையை நேற்று முன்தினம் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியான சஷாங் சேகர் தேவாங்கன், சதீஷ் குமார் ரவியிடம் வழங்கினார்.

“இந்த உதவியின் மூலம் ஊழியர்களும், அவர்களின் குடும்பங்களும் ஒரு நிறுவனத்தின் உண்மையான செல்வம், அவர்களின் உயிரைக்காப்பாற்றுவது முதன்மையான வேலை என்பதைக் காட்டுவதின் மூலம் ஒரு முன்மாதிரியை எங்கள் நிறுவனம் வைத்துள்ளது” என்று சஷாங் சேகர் தேவாங்கன் குறிப்பிட்டார்.

Next Story