நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்


நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்:  முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
x
தினத்தந்தி 28 Nov 2021 9:59 AM GMT (Updated: 28 Nov 2021 9:59 AM GMT)

இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. அரசு தரப்பில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், பியூஸ் கோயல் ஆகியோர் பங்கேற்றனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கள் கிழமை வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து எம்.பிக்களும் கூட்டத்தொடரில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என பாஜக கொறடா உத்தரவும் பிறப்பித்துள்ளது. 

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு தீவிரமாக இருந்தாலும், பெகாசஸ் விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ஆகியவற்றை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மத்திய அரசு சார்பில் இந்த கூட்டத்தொடரில் 26 மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது. இதில் 3 அவசரச்சட்டங்களுக்கு மாற்றாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. 

இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

நாளை குளிர் கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், இன்று மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமயில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. அரசு தரப்பில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், பியூஸ் கோயல் ஆகியோர் பங்கேற்றனர். 

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற  மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறும் போது, “  பிரதமர் மோடி இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார் என நாங்கள் எதிர்பார்த்தோம்.  விவசாய சட்டங்கள் வேறு வடிவத்தில் மீண்டும் கொண்டு வரப்படலாம் என சில அச்சங்கள் எழுந்துள்ளதால், அது குறித்து கூடுதல் தகவல்களை கேட்க நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.   அனைத்துக்கட்சி கூட்டத்தில் 31 கட்சிகள் பங்கேற்றன. 

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசுவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சஞ்செய் சிங் அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். 


Next Story