15 மாதங்கள் பிணவறையில் இருந்த கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடல்கள் புழுக்கள் மொய்த்த நிலையில் மீட்பு


15 மாதங்கள் பிணவறையில் இருந்த கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடல்கள் புழுக்கள் மொய்த்த நிலையில் மீட்பு
x
தினத்தந்தி 30 Nov 2021 4:33 AM GMT (Updated: 2021-11-30T13:53:20+05:30)

கொரோனாவால் உயிரிழந்த இருவரின் சடலங்கள் 15 மாதங்கள் பிணவறையில் இருந்துள்ளன. அந்த உடல்களை புழுக்கள் மொய்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு,

2020-ம் ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலையில் இந்தியாவில் பலர் உயிரிழந்தனர். அதில் கர்நாடக மாநிலம் பெங்களூரு சாம்ராஜ்பேட் பகுதியை சேர்ந்த துர்கா மற்றும் கேபி அக்ரகாரா பகுதியை சேர்ந்த முனிராஜ் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

கொரோனா பாதிக்கப்பட்ட இருவரும் பெங்களூரு நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால், அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதையடுத்து, கொரோனா தொற்றால் உயிரிழந்த துர்கா மற்றும் முனிராஜ் ஆகிய இருவரின் உடல் மருத்துவமனையில் இருந்த பிணவறையில் வைக்கப்பட்டது.

ஆனால், இரண்டு உடல்களையும் வைக்கப்பட்டதையே மறந்த மருத்துவமனை நிர்வாகம் மறந்துள்ளது. இது தொடர்பாக உறவினர்கள் தரப்பில் கேட்டபோது அப்போதைய சூழலில் சுகாதாரத்துறையே இருவரின் உடல்களையும் தகனம் செய்ததாக கூறப்பட்டது. இருவரின் இறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டதால் உறவினர்கள் இது தொடர்பாக பெரிதும் கண்டுகொள்ளவில்லை.

இதனிடையே, அந்த மருத்துவமனையி உள்ள பிணவறையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுத்தம் செய்துள்ளனர். அப்போது, அங்கிருந்த குளிர்பதன பெட்டியை ஊழியர்கள் திறந்துள்ளனர். 

அந்த குளிர்பதன பெட்டியில் புழுக்கள் மொய்த்த நிலையில் கிடந்த இரண்டு சடலங்கள் கிடந்துள்ளன. இதனை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த இரண்டு உடல்களும் கடந்த ஆண்டு கொரோனாவால் உயிரிழந்த துர்கா மற்றும் முனிராஜூன் உடல்கள் என்பது தெரியவந்துள்ளது.

15 மாதங்களுக்கு மேலாக இருவரின் உடல்கள் பிணவறையில் அப்படியே கிடந்ததும் உறவினர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. மருத்துவமனையின் அலட்சியப்போக்கிற்கு கண்டனம் தெரிவித்துள்ள உறவினர்கள் இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தியுள்ளன.Next Story