தேசிய கீதத்தை அவமதித்தாரா மம்தா பானர்ஜி..? பா.ஜ.க. கடும் தாக்கு
மம்தா பானர்ஜி மீது தேசியகீதத்தை அவமதித்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மூன்று நாட்கள் பயணமாக மும்பை சென்றுள்ளார். மும்பையில் முகாமிட்டிருக்கும் அவர், மராட்டிய அரசியல் கட்சி தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்து வருகிறார். அந்த வகையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேற்று சந்தித்து பேசினார்.
இந்நிலையில், மும்பை பா.ஜ.க தலைவர் ஒருவர் மம்தா பானர்ஜி மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தேசிய கீதத்திற்கு முற்றிலும் அவமரியாதை அளிக்கும் விதமாக அவர் நேற்று நடந்து கொண்டார் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேற்கு வங்காள பா.ஜ.க. தரப்பு முன்வைத்துள்ள குற்றச்சாட்டில் கூறியிருப்பதாவது, “மும்பையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. ஆனால், அவர் தேசிய கீதம் ஒலிபரப்பான பின்பும் உட்கார்ந்து கொண்டு இருந்துள்ளார்.
சில வினாடிகள் கழித்து தான் எழுந்து நின்றுள்ளார். பாதி வரிகள் மட்டுமே பாடிய அவர் அதன்பின் பாடாமல் நிறுத்தியுள்ளார்.
முதல்வர் பதவி வகிக்கும் மம்தா தேசிய கீதத்தை அவமதித்துள்ளார். மேற்கு வங்காளத்தின் கலாச்சாரம், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் இந்திய தேசத்தை அவர் அவமதித்து உள்ளார்” என்று பா.ஜ.க. தரப்பு குற்றம்சாட்டி உள்ளது.
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story