ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இணையாக மாற்று கூட்டணியை உருவாக்குவது பா.ஜனதாவை வலுப்படுத்தும்: சிவசேனா
ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இணையாக மாற்று கூட்டணியை உருவாக்குவது பா.ஜனதாவை வலுப்படுத்தும் என சிவசேனா எச்சரித்து உள்ளது.
மம்தா விமர்சனம்
மேற்கு வங்க முதல்-மந்திரி பானர்ஜி கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை வந்தார். அவர் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினார். மேலும் மும்பையில் நடந்த நிகழ்ச்சிகளில் பேசும் போது மம்தா பானர்ஜி ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசினார். இதேபோல அவரது கட்சி பத்திரிகையும் காங்கிரசை விமர்சித்து வருகிறது.
இந்தநிலையில் சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் கூறியிருப்பதாவது:-
மம்தா பானர்ஜியின் மும்பை வருகைக்கு பிறகு எதிர்க்கட்சிகள் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளன. பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான மாற்றை கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் இதில் யாரை எடுத்து செல்வது, யாரை விட்டு செல்வது என அதிக விவாதங்கள் நடைபெறுகின்றன. ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றால் யாரும் பா.ஜனதா பற்றி பேச வேண்டாம். தலைமை 2-வது பிரச்சினை தான். ஆனால் ஒரு முடிவை எல்லோரும் சேர்ந்து எடுக்க வேண்டும்.
பா.ஜனதாவை வலுப்படுத்தும்
பிரதமர் மோடியும், பா.ஜனதாவும் காங்கிரஸ் வீழ்ச்சிக்காக உழைத்தார்கள். அது அவர்களின் திட்டம். ஆனால் மோடிக்கு எதிரானவர்களும் கூட காங்கிரசை வீழ்த்த விரும்புகின்றனர். இது மிக பெரிய அச்சுறுத்தல் ஆகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியை போல, தேசிய ஜனநாயக கூட்டணியும் வெளிபடவில்லை. பா.ஜனதாவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி தேவையில்லை.
ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி தேவை. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இணையாக கூட்டணியை உருவாக்குவது பா.ஜனதாவை வலுப்படுத்தும். இதேபோல காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேண்டாம் என நினைப்பவர்கள் தங்கள் நிலைப்பாட்டை பொது வெளியில் தெளிவுபடுத்த வேண்டும். பின்னால் பேசி குழப்பங்களை ஏற்படுத்த கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story