தந்தை பிபின் ராவத், தாய் மதுலிகா ராவத் உடல்களுக்கு மகள்கள் கண்ணீர் அஞ்சலி...!


தந்தை பிபின் ராவத், தாய் மதுலிகா ராவத் உடல்களுக்கு மகள்கள் கண்ணீர் அஞ்சலி...!
x
தினத்தந்தி 9 Dec 2021 10:21 PM IST (Updated: 9 Dec 2021 10:21 PM IST)
t-max-icont-min-icon

தந்தை பிபின் ராவத், தாய் மதுலிகா ராவத் உடல்களுக்கு அவர்களது மகள்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

புதுடெல்லி,

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களும், இன்று காலை 10.40 மணியளவில் மருத்துவமனையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. வாகனங்கள் வரும் வழியெங்கும் பொதுமக்கள் கூடி நின்று மலர்களை தூவி இறுதி மரியாதை செலுத்தினர்.

பின்னர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மைதானத்தில், பிபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்த வீரர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து வீரர்களின் உடல்கள் தனி தனி ஆம்புலன்சில் சூலூர் விமானப்படைக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் மூலம் வீரர்களின் உடல்கள் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன. 

இதைத் தொடர்ந்து சூளூரில் இருந்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களை சுமந்து கொண்டு புறப்பட்ட தனி விமானம் டெல்லி சென்றடைந்தது. டெல்லியில் உள்ள பாலம் விமானப்படைத் தளத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ வீரர்கள் ஆகியோரின் உடல்களும் இறுதி அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டன. 

பின்னர் தந்தை பிபின் ராவத், தாய் மதுலிகா ராவத் உடல்களுக்கு அவர்களது மகள்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தாய் மற்றும் தந்தையின் உடலைப் பார்த்து மகள்கள் கதறும் காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்கியது.  தொடர்ந்து முப்படை தலைமை தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர் அஜய் பட், பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். 

இதனையயடுத்து விபின் ராவத் மகள்கள் மற்றும் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். அத்துடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பட், பாதுகாப்பு ஆலாசகர் அஜித்தோவல் உள்ளிட்டோரும் ஆறுதல் தெரிவித்தனர்.

Next Story