பெங்களூரு வந்த ஜெர்மனி சுற்றுலா பயணிகள் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பா..?


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 Dec 2021 2:59 AM IST (Updated: 10 Dec 2021 2:59 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு வந்த ஜெர்மனி சுற்றுலா பயணிகள் 2 பேருக்கு கொரோனா உறுதியானதால், அவர்களின் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு, 

பெங்களூருவுக்கு வந்த ஜெர்மனி சுற்றுலா பயணிகள் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டார்களா என்பதை கண்டறிய சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

நாட்டிலேயே பெங்களூருவில் தான் முதலில் ஒமைக்ரான் வைரஸ் தனது கணக்கை தொடங்கியது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வரும் பயணிகளுக்கு, விமான நிலையத்தில் வைத்தே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் வெளிநாட்டு விமான பயணிகள் வெளியே அனுப்பப்பட்டு வருகின்றனர். அதன்படி, ஜெர்மனியில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

அப்போது 2 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த பயணிகளில் ஒருவருக்கு 40 வயதும், மற்றொருவருக்கு 50 வயது என்பதும் தெரியவந்துள்ளது. அந்த 2 பயணிகளும் சிவாஜிநகரில் உள்ள பவுரிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அந்த பயணிகள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால், அவர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என்பதை கண்டறிய சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, 2 பயணிகளின் சளி மாதிரி பெறப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வந்த பிறகு தான் 2 பயணிகளுக்கும் சாதாரண கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்களா?, அல்லது ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்களா? என்பது தெரியவரும்.

முன்னதாக 2 பயணிகளில் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து தப்பி செல்ல முயன்றார். அதாவது கொரோனா பரிசோதனை அறிக்கை வருவதற்கு தாமதமானதால், விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவரது புகைப்படம் மூலம் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்கு பின்பு விமான நிலையத்தில் சுற்றிய அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். உடனடியாக அவரை சுகாதாரத்துறை ஊழியர்கள் பவுரிங் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story