"நான் தமிழில் பேசுகிறேன் உங்களுக்கு புரியுதா என்று சொல்லுங்கள்" மக்களவையில் கனிமொழி நகைச்சுவை...!


நான் தமிழில் பேசுகிறேன் உங்களுக்கு புரியுதா என்று சொல்லுங்கள் மக்களவையில் கனிமொழி நகைச்சுவை...!
x
தினத்தந்தி 10 Dec 2021 10:06 AM IST (Updated: 10 Dec 2021 10:06 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களை ஆங்கிலத்திலோ, அந்தந்த மாநில மொழிகளிலோ வைப்பதில் என்ன சிக்கல் எனவும் கனிமொழி கேள்வி எழுப்பினார்.

டெல்லி ,

கிளாஸ்கோ காலநிலை மாநாட்டில் இந்தியா அளித்த நெட் ஜீரோ உள்ளிட்ட உறுதிமொழிகள் குறித்தும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மத்திய அரசு மேற்கொள்ள இருக்கும் திட்டங்கள் குறித்தும், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசிப்பதின் முக்கியத்துவம் குறித்தும் மக்களவையில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது பேசிய திமுக எம்பி கனிமொழி, "ஆத்ம நிர்பார் பாரத் அபியான்" என்ற திட்டத்தின் பெயரை உச்சரிக்க சிரமப்பட்டார். அப்போது அதை சரியாக உச்சரிக்க சபாநாயகரும் மற்ற வடமாநில உறுப்பினர்களும் உதவினர்.

இதையடுத்து இந்தியில் உள்ள திட்டப் பெயர்கள் புரியும்படி இல்லை என நகைச்சுவையாக மக்களவையில் கனிமொழி கூறினார். மேலும் வர "இது வெவ்வேறு மொழிகள் என்பதை நீங்கள் புரிந்துகொள்வதில்லை. மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களை உச்சரிப்பதற்கே சிரமமாக இருக்கிறது. அதனால் தான் அனைத்து தரப்பினருக்கும் புரியும் வகையில் திட்டங்களுக்கான பெயர்களை ஆங்கிலத்திலோ, அந்தந்த மாநில மொழிகளிலோ வைப்பதில் என்ன சிக்கல் எனவும்  கனிமொழி கேள்வி எழுப்பினார்.

நான் தமிழில் பேசினால் உங்களுக்கு புரியுமா ? என்றார் கனிமொழி, அப்போது குறுக்கிட்டு பேசிய ஒரு உறுப்பினர், "உங்களுக்கு புரியாமல் போனால் நாங்கள் என்ன செய்வது?" என கேட்க, அதற்கு சட்டென்று பதிலடி தந்த கனிமொழி "அப்படி என்றால் நான் தமிழில் பேசுகிறேன்... உங்களுக்கு புரியுதா என்று சொல்லுங்கள்" என்றார்.

இந்தியில் பேச நாடாளுமன்றத்தில் தடை இல்லை, மற்ற மொழிகள் பேசுவதாக இருந்தால் முன்கூட்டியே ஏற்பாடு செய்வதற்காக முன் அனுமதி பெறவேண்டும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து, மக்களவையில் திமுக எம்பி நகைச்சுவையுடன் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story