ஆப்கானிஸ்தானில் சிக்கித்தவித்த 110 இந்தியர்கள் டெல்லி வருகை
ஆப்கானிஸ்தானில் சிக்கித்தவித்த 110 இந்தியர்கள், தனி விமானத்தில் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
புதுடெல்லி,
கடந்த ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றினர். அதைத்தொடர்ந்து அவர்களின் வன்முறைக்கு பயந்து உள்நாட்டு மக்களும், வெளிநாட்டினரும் அந்நாட்டை விட்டு வெளியேறினர்.
இந்தியர்கள், இந்திய தூதரக ஊழியர்கள் ஆகியோரும் வெளியேற்றப்பட்டனர். இந்தநிலையில், இன்னும் வெளியேற முடியாமல் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அங்கு தவித்து வருவது தெரிய வந்தது. ‘இந்தியன் வேர்ல்டு போரம்’ என்ற அமைப்பின் தலையீட்டின்பேரில், இந்திய அரசு ஏற்பாடு செய்த தனி விமானத்தில் அவர்கள் நேற்று காபூலில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.
இந்தியர்கள், ஆப்கானிஸ்தான் சீக்கியர்கள், இந்துக்கள் என மொத்தம் 110 பேர் விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். இவர்களில், சீக்கிய குருத்வாரா மீதான பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட காவலாளி மஹரம் அலியின் குடும்பத்தினரும் அடங்குவர். அவர்களுடன், ஆப்கானிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குருத்வாராக்களில் இருந்து சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த்சாகிப்பின் 3 பிரதிகளும், காபூலில் உள்ள 5-ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு இந்து கோவிலில் இருந்து ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை ஆகிய நூல்களும் எடுத்து வரப்பட்டன.
நேற்று பிற்பகலில் அந்த விமானம் டெல்லி வந்து சேர்ந்தது. பின்னர், சீக்கிய புனித நூல்கள், டெல்லி மகாவீர் நகரில் உள்ள குருத்வாராவுக்கும், இந்து மத நூல்கள் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள இந்து கோவிலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட ஆப்கானிஸ்தான் சீக்கியர்கள் மற்றும் இந்துக்களுக்கு ‘சோப்டி பவுண்டேசன்’ என்ற தொண்டு நிறுவனம் மறுவாழ்வு திட்டத்தை நிறைவேற்ற உள்ளது. 110 பேரையும் அழைத்து வந்ததற்காக பிரதமர் மோடி, மத்திய வெளியுறவு அமைச்சக உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு ‘இந்தியா வேர்ல்டு போரம்’ நன்றி தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story