கர்நாடகத்தில் விரைவில் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: பள்ளி கல்வித்துறை மந்திரி


கர்நாடகத்தில் விரைவில் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: பள்ளி கல்வித்துறை மந்திரி
x
தினத்தந்தி 11 Dec 2021 10:01 PM IST (Updated: 11 Dec 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில், அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மந்திரி பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று மந்திரி பி.சி.நாகேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

15 ஆயிரம் ஆசிரியர்கள்

கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் பணி இடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கைகளை அரசும், பள்ளி கல்வித்துறையும் எடுத்து வருகிறது. 2021-22 கல்வி ஆண்டில் மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படும். மாநிலத்தில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை இல்லை.

ஏற்கனவே 23 ஆயிரத்து 78 ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தேவையான 10 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். கல்யாண கர்நாடக மாவட்டங்களில் தொடக்க பள்ளிகளில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.

முன்எச்சரிக்கை நடவடிக்கை

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை. ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதை தடுக்க அந்தந்த மாவட்ட நிர்வாகம் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மாநிலத்தில் கொரோனா கட்டுக்குள் இருப்பதால், பள்ளிகள் மூடப்படாது. மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்காக தனியாக வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மந்திரி பி.சி.நாகேஷ் கூறினார்.


Next Story