நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் துணிச்சலான பிரதமர் இந்தியாவுக்குத் தேவை - பரூக் அப்துல்லா


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 Dec 2021 8:47 AM (Updated: 14 Dec 2021 8:47 AM)
t-max-icont-min-icon

நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் துணிச்சலான பிரதமர் இந்தியாவுக்குத் தேவை என்று பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

டெல்லியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா எழுதிய புத்தக வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது. அதில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா பங்கேற்று பேசினார்.

அப்போது பேசிய அவர், “இந்த தேசத்தின் மக்கள் வலிமையாக இருந்தால்தான் இந்தியா வலிமையாக மாறும். அனைவரையும் ஒன்றாக இணைக்கும், இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என அனைவரையும் இணைக்கும், அரசியலால் பிளவுபடுத்தாத பிரதமர்தான் இந்தியாவுக்குத் தேவை. இந்தியாவுக்குப் பிரிவினைகள் தேவையில்லை. ஆனால், சோகம் என்னவென்றால், ஒவ்வொரு தேர்தலும் இந்தியாவையும், மக்களையும் பிளவுபடுத்துகின்றன.

நான் முஸ்லிம்தான், அனைத்து மதங்களின் மீதும் என்னுடைய மதத்தைவிட மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். இதனால் என்ன தவறு வந்துவிடப் போகிறது. ஆனால், இன்றைய நிர்வாகத்தைப் பாருங்கள். எவ்வாறு நாம் ஒவ்வொரு மூலையிலும் பிரிந்து கிடக்கிறோம். நமக்கு வலிமையான இந்தியா தேவை. இந்திய மக்கள் வலிமையாக மாறாதவரை, இந்தியா வலிமையாக மாறாது. இந்தக் கருமேகங்கள் கடந்து சென்றால், மலர்ச்சியான புத்துணர்ச்சியான இந்தியாவைக் காணலாம். இந்தியா அனைவருக்குமானது, ஒருவருக்கானது அல்ல. முன்னதாக தேவகவுடா பிரதமராக இருந்தபோது பாதுகாப்பு துறையின் எச்சரிக்கையையும் மீறி, பொது மக்களுக்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகவே  மாநிலத்தில் திறந்த ஜீப்பில் பயணம் செய்தார்” என்று பரூக் அப்துல்லா கூறினார். 

Next Story