கூடங்குளம் 3 மற்றும் 4-வது அணுஉலை பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும் - மத்திய மந்திரி தகவல்
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4-வது அணுஉலை பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும் என மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு விண்வெளி மற்றும் அணுசக்தி துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
“கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய முன்மாதிரி அதிவேக ஈனுலை கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2003-ம் ஆண்டு ரூ.3 ஆயிரத்து 492 கோடி செலவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது இதன் திட்ட மதிப்பீடு ரூ.6 ஆயிரத்து 840 கோடியாக உயர்ந்துள்ளது.
தற்போது, இந்த ஈனுலை ஒருங்கிணைக்கும் கட்டத்தில் இருக்கிறது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4-வது அணுஉலைகளின் பணி 55 சதவீதம் முடிவடைந்துள்ளது. 3-வது அணுஉலை பணி 2023-ம் ஆண்டு மார்ச் மாதமும், 4-வது அணுஉலை பணி அதே ஆண்டு நவம்பர் மாதமும் முடிவடையும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
“மக்களவையில் மற்றொரு கேள்விக்கு ஜிதேந்திர சிங் அளித்த பதில் வருமாறு:-
அணுமின் நிலையங்களை பெரிய அளவில் விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. கடந்த 7 ஆண்டுகளில் அணுமின்சார உற்பத்தி திறன் 4 ஆயிரத்து 780 மெகாவாட்டில் இருந்து 6 ஆயிரத்து 780 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இது 40 சதவீத உயர்வு ஆகும்.
அணுமின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு தேவையான யுரேனியம் போதுமான அளவு இல்லை. எனவே, தோரியம் சார்ந்த மாற்று எரிபொருளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story