இந்தியாவுக்கு எதிராக பொய் பிரசாரம்: பாகிஸ்தானின் 20 யூடியூப் சேனல்களுக்கு தடை
இந்தியாவுக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வந்த பாகிஸ்தானில் இருந்து இயங்கக்கூடிய 20 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவுக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வந்த பாகிஸ்தானில் இருந்து இயங்கக்கூடிய 20 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதே போல் இந்தியாவின் சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்து போலி செய்திகளை பரப்பி வந்த 2 இணையதளங்களும் முடக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தடை செய்யப்பட்ட யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஒருங்கிணைக்கப்பட்ட தவறான தகவல் வலையமைப்பைச் சேர்ந்தவை. இவை காஷ்மீர் விவகாரம், ராமர் கோவில், விவசாயிகள் போராட்டம், குடியுரிமை சட்ட திருத்த மசோதா மற்றும் முப்படை தலைமை தளபதியின் மரணம் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்களை பற்றிய போலி செய்திகளை பரப்புகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூப் சேனல்களின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 35 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது மற்றும் அவற்றின் வீடியோக்கள் 55 கோடி பார்வைகளைப் பெற்றன. அவற்றில் சில யூடியூப் சேனல்கள் பாகிஸ்தானிய செய்தி சேனல்களின் தொகுப்பாளர்களால் இயக்கப்படுகின்றன.
உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்களை குறைமதிப்புக்கு உட்படுத்த இந்த சேனல்கள் பயன்படுத்தப்படும் என்று அஞ்சப்பட்டது.
எனவே தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ன் விதி 16-ன் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மற்றும் இணையதளங்களுக்கு தடைவிதிகப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி 200க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story