ஒமைக்ரான் தொற்று மேலும் அதிகரித்தால் பள்ளிகள் மூடப்படலாம் - மராட்டிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 Dec 2021 7:51 AM GMT (Updated: 22 Dec 2021 7:51 AM GMT)

ஒமைக்ரான் தொற்று மேலும் அதிகரித்தால் பள்ளிகள் மூடப்படலாம் என்று மராட்டிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

மும்பை, 

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. நாட்டிலேயே டெல்லியை அடுத்து மராட்டியத்தில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. மாநிலம் முழுவதும் ஏற்கனவே 54 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்தநிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் நெருங்குவதால் உருமாறிய வைரசின் பரவல் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. எனவே ஒமைக்ரான் பரவலை தடுக்க மும்பை மாநகராட்சி ஏற்கனவே பல கட்டுப்பாடுகளை அறிவித்து இருந்தது. இதேபோல பொதுமக்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விருந்து நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டு இருந்தது.

இதனிடையே கடந்த டிசம்பர் 1ம் தேதி மராட்டியத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஒமைக்ரான் தொற்று மேலும் அதிகரித்தால் பள்ளிகள் மூடப்படலாம் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஓமைக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்தால், நாங்கள் மீண்டும் பள்ளிகளை மூடுவதற்கான முடிவை எடுக்கலாம். நாங்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறோம்” என்று அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்தார்.

தற்போது மராட்டியத்தில் உள்ள பள்ளிகள் மூன்று முதல் நான்கு மணி நேர இடைவெளியில் இயங்கி வருகின்றன, மேலும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தணிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் தனி தனி குழுக்களாக அழைக்கப்பட்டு வருகின்றனர். 

முன்னதாக மராட்டிய மாநில பள்ளிக் கல்வித் துறை நடத்திய ஆய்வில், 70 சதவீதத்துக்கும் அதிகமான பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்க விரும்புவதாகக் கூறியதை அடுத்து, பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story