பேய் பிடித்ததால் அடித்து துன்புறுத்துகிறார் - மனைவியை கத்தியால் குத்திய கணவன்
பேய் பிடித்ததால் தன்னை அடித்து துன்புறுத்துவதாக மனைவியை கணவன் கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பிஹ்வண்டி பகுதியை சேர்ந்தவர் இஃப்ரான் ஷேக். இவரது மனைவி குரேஷா ஷேக் (21 வயது).
இஃப்ரானுக்கும் அவரது மனைவி குரேஷாவுக்கும் இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதில், இஃப்ரானை அவரது மனைவி அவ்வப்போது அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், தனது மனைவிக்கு பேய் பிடித்துள்ளதாகவும், அதனால் தான் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் இஃப்ரான் நினைத்துள்ளார்.
யாரோ ஒருவர் தன் மனைவி மீது பேயை ஏவி விட்டதால் தான் அவர் தன்னை தாக்குவதாக இஃப்ரான் மூடநம்பிக்கை மீது நம்பியுள்ளார்.
இந்நிலையில், இஃப்ரான் மதுபோதையில் நேற்று நள்ளிரவு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவரது மனைவி குரேஷா கணவரிடம் சண்டையிட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் தனது மனைவி உடலில் உள்ள பேய் தான் தன்னுடன் சண்டையிடுவதாகவும், அந்த பேயால் தான் மனைவி தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் எண்ணிய இஃப்ரான் ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்தை கத்தியை கொண்டு குரேஷாவை குத்தினார்.
இந்த கத்திக்குத்து தாக்குதலில் குரேஷா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து படுகாயமடைந்த குரேஷாவை மீட்டு அருகில் உள்ள மருத்துமனையில் அனுமதித்தனர். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மனைவியை கத்தியால் குத்திய இஃப்ரான் தப்பியோடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய இஃப்ரானை தீவிரமாக தேடி வருகின்றனர். கணவன் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த மனைவி குரேஷா மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Related Tags :
Next Story