தேங்காயை உடைத்ததால் ரூ.1.6 கோடியில் அமைக்கப்பட்ட சாலையில் விரிசல்..!
ரூ.1.6 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை, ஒரேயொரு தேங்காயை உடைத்ததற்கே சேதமடைந்துள்ளது.
லக்னோ,
தேங்காயை சாலையில் உடைப்பது தான் வழக்கம். ஆனால் தேங்காயை உடைத்ததால் சாலையில் விரிசல் ஏற்பட்ட சம்பவம் சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் அரங்கேறி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.1.6 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை, ஒரேயொரு தேங்காயை உடைத்ததற்கே சேதமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள கெடா அஜிஸ்புரா கிராமத்தில் பாசனத்துறையினர் இந்த சாலையை அமைத்துள்ளனர். அவர்கள் மேலதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்று முழு சாலையையும் சீரமைப்பதற்காக, முதல்கட்டமாக சுமார் 700 மீட்டர் தூரத்துக்கு இந்த சாலையை அமைத்துள்ளனர்.
பின்னர் அதன் திறப்பு விழாவிற்கு எம்.எல்.ஏ.வையும் அழைத்துள்ளனர். பிஜ்னோர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட சாலையை திறந்து வைக்க வந்திருந்த பா.ஜ.க எம்.எல்.ஏ சுசி சவுத்ரி சுபமுகூர்த்த சமயத்தில் தேங்காயை உடைத்து விழாவை தொடங்கினார். ஆனால் தேங்காயை உடைத்த இடத்தில் சாலை பொடிந்து தூளானது. உடனே எம்.எல்.ஏ.வின் கணவர் சுத்தியலால் அந்த சாலையை லேசாக தட்டி பார்த்தார். உடனே அந்த சாலை பொடிய தொடங்கியது.
இதனால் கோபமடைந்த எம்.எல்.ஏ. தரம் குறைந்த பொருட்களை கொண்டு சாலை அமைக்கப்பட்டதை கண்டித்து சாலையில் தர்ணாவில் ஈடுபட்டார். சம்பவத்தை கேள்விப்பட்ட மாவட்ட கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
பாசனப் பிரிவு நிர்வாகப் பொறியாளர் சாலையின் தரம் பற்றி ஆய்வு செய்ய சாலையின் மாதிரியை எடுத்து பகுப்பாய்வுக்காக அனுப்பி உள்ளார். மேலும், பிஜ்நோர் மாவட்ட அதிகாரியின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story