ஒமைக்ரான் பரவல்: 5 மாநில தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 27 Dec 2021 8:14 AM IST (Updated: 27 Dec 2021 8:14 AM IST)
t-max-icont-min-icon

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் 5 மாநில தேர்தலை நடத்துவது குறித்து மத்திய சுகாதாரத்துறையுடன் இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

புதுடெல்லி, 

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கிடையே, ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் தற்போதைய கொரோனா பாதிப்பு நிலைமை மற்றும் ஐந்து மாநிலங்களில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து விவாதிக்க தேர்தல் ஆணையம் மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷனை இன்று (திங்கள்கிழமை) சந்திக்க உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா நிலைமை மற்றும் புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டான ஒமைக்ரானின் தோற்றம் குறித்த தகவல்களை, தேர்தல் ஆணையம் , சுகாதார செயலர் ராஜேஷ் பூஷனிடம் இருந்து பெறலாம் என்று கூறப்படுகிறது. 

இதனிடையே கொரோனா பரவல் தொடர்பான ஒரு பொதுநல வழக்கில் உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டு சமீபத்தில் ஒரு கருத்து வெளியிட்டது. அதில், ஒமைக்ரான் பரவலால் சட்டப்பேரவை தேர்தல்களை தள்ளிவைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்திருந்தது. இதற்காக அரசியல் கட்சிகளின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு தடை விதிப்பது குறித்தும் முடிவு எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தது. இதையடுத்து தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் பெரிய மாநிலமான உத்தர பிரதேச மாநிலத்திற்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து முடிவு எடுக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Next Story