புனேவில் துணிகர சம்பவம்; ஏ.டி.எம். எந்திரம் வெடிவைத்து தகர்ப்பு - ரூ.17 லட்சம் கொள்ளை
ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த கொள்ளை கும்பல் அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தை ஜெலட்டின் குச்சிகளை கொண்டு வெடிவைத்து தகர்த்தனர்.
புனே,
புனே அருகே ஏ.டி.எம். எந்திரத்தை வெடிவைத்து தகர்த்து ரூ.17 லட்சம் கொள்ளை அடித்துவிட்டு தப்பிஓடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
ஏ.டி.எம். எந்திரம் தகர்ப்பு
புனே அருகில் உள்ள அலண்டி நகர் பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. இந்தநிலையில் நேற்று அதிகாலை இந்த ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த கொள்ளை கும்பல் அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தை ஜெலட்டின் குச்சிகளை கொண்டு வெடிவைத்து தகர்த்தனர். பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த சுமார் ரூ.17 லட்சத்தை கொள்ளை அடித்துவிட்டு தப்பிச்சென்றனர்.
இந்த ஏ.டி.எம். மையம் உள்ள பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதாலும், சம்பவம் நடத்த நேரம் அதிகாலை என்பதாலும் அருகில் இருந்த யாருக்கும் வெடிச்சத்தம் கேட்கவில்லை என தெரிகிறது.
போலீசார் விசாரணை
இந்தநிலையில் நேற்று காலையில் ஏ.டி.எம். மையத்திற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் எந்திரம் தகர்க்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுகுறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
இதன்பேரில் போலீசாரும், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு படை பிரிவினரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை நாங்கள் ஆய்வு செய்தோம். ஆனால் அதை வைத்து ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை அடித்தவர்களை அடையாளம் காண முடியவில்லை. கொள்ளையடிக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.16 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரை இருந்ததாக தெரிகிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம ஆசாமிகளை கண்டுபிடிக்கும் பணியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.
இந்த ஆண்டு புனே கிராமப்பகுதியில் இதேபாணியில் நடைபெற்ற 2-வது சம்பவம் இதுவாகும். கடந்த ஜூலை மாதம் சக்கன் எம்.ஐ.டி.சி. பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரம் வெடிவைத்து தகர்க்கப்பட்டு அதில் இருந்த ரூ.28 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story