15 காலி பணியிடங்களுக்கு 11 ஆயிரம் விண்ணப்பங்கள்.. அச்சமூட்டும் மத்தியப்பிரதேச கள நிலவரம்!


15 காலி பணியிடங்களுக்கு 11 ஆயிரம் விண்ணப்பங்கள்.. அச்சமூட்டும் மத்தியப்பிரதேச கள நிலவரம்!
x
தினத்தந்தி 29 Dec 2021 12:33 PM IST (Updated: 29 Dec 2021 12:33 PM IST)
t-max-icont-min-icon

விண்ணப்பதாரர்களில் பட்டதாரிகள், முதுகலைப் பட்டதாரிகள், பொறியியலாளர்கள், எம்பிஏ பட்டதாரிகள் மற்றும் சிவில் நீதிபதி தேர்வு எழுதவிருக்கும் ஆர்வலர்களும் அடங்குவர்.

போபால்,

மத்தியப் பிரதேசத்தில் சுமார் 1 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன என்ற போதிலும் 32 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலையில்லாமல் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் சமீபத்தில் பியூன், ஓட்டுநர் மற்றும் வாட்ச்மேன் உள்ளிட்ட 15 காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. மொத்தம் 15 காலி பணியிடங்கள். இதற்கு கிட்டத்தட்ட 11 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்காக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிட்டத்தட்ட 11,000 வேலையற்ற இளைஞர்கள் குவாலியர் நகரத்திற்கு வந்திருந்தனர்.

விண்ணப்பதாரர்களில் பட்டதாரிகள், முதுகலைப் பட்டதாரிகள், பொறியியலாளர்கள், எம்பிஏ பட்டதாரிகள் மற்றும் சிவில் நீதிபதி தேர்வு எழுதவிருக்கும் ஆர்வலர்களும் அடங்குவர். 

அங்கு வந்திருந்த ஒரு விண்ணப்பதாரரான அஜய் பாகேல் கூறியதாவது, "நான் ஒரு அறிவியல் பட்டதாரி, நான் பியூன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளேன். பிஎச்டி(முனைவர் பட்டம்) படித்தவர்களும் இங்கே வரிசையில் உள்ளனர்" என்றார்.

இன்னொரு விண்ணப்பதாரரான ஜிதேந்திர மவுரியா கூறியதாவது, “நான் சட்டப் பட்டதாரி, டிரைவர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளேன். நானும் நீதிபதி தேர்வுக்கு தயாராகி வருகிறேன். சில சமயங்களில் புத்தகங்கள் வாங்க பணம் இல்லாத நிலை ஏற்படும். அதனால் இந்த வேலை கிடைக்கும் என நினைத்து விண்ணப்பித்தேன்” என்று வருத்தத்துடன் கூறினார்.

அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில் இருந்து பியூன் வேலைக்கு வந்துள்ளதாக  பட்டதாரியான அல்தாப் கூறினார்.

மத்தியப்பிரதேச அரசின் சமீபத்திய தெருவோர வியாபாரிகள் திட்டத்திற்கு கிட்டத்தட்ட 15 லட்சம் விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன. அவற்றுள் தேர்ந்தெடுக்கப்பட்ட 99 ஆயிரம் பேரில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் பட்டதாரிகள் ஆவர்.

முன்னதாக மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், “ஒரு வருடத்தில் ஒரு லட்சம் பேரை அரசு வேலையில் பணியமர்த்துவோம். அனைவருக்கும் அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்ல விரும்புகிறேன், ஒவ்வொரு மாணவருக்கும் அரசு வேலை கிடைக்காது"  என்று சில தினங்களுக்கு முன் பேசியிருந்தார்.

இதனை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நரேந்திர சலுஜா, “சிவராஜ் அரசின் 17 ஆண்டுகால வளர்ச்சி உண்மையில் எப்படி இருக்கிறது என்பதை இது காட்டுகிறது” என்று கூறினார்.

மத்தியப் பிரதேசத்தில் வேலையின்மை விகிதம்  நவம்பர் மாதத்தில் 1.7 சதவீதமாக இருந்தது, இது மற்ற மாநிலங்களை விட மிகக் குறைவு என இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் தகவல் வெளியிட்டுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.

மத்தியபிரதேசத்தில் கடந்த ஆண்டில் மட்டும் தற்கொலை செய்துகொண்டோர் எண்ணிக்கை 95க்கும் குறையாது உள்ளது என்று தேசிய குற்றப் பதிவுப் பணியகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story