நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் 6 மாதம் நீட்டிப்பு: மத்திய அரசு உத்தரவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 30 Dec 2021 8:11 PM GMT (Updated: 30 Dec 2021 8:11 PM GMT)

நாகாலாந்தை தொந்தரவுகள் மற்றும் ஆபத்து நிறைந்த மாநிலமாக அறிவித்ததோடு, ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை மேலும் 6 மாதம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதிகள் மற்றும் உள்நாட்டு போராளி குழுக்களின் நடமாட்டம் அதிகம் உள்ள ஜம்மு-காஷ்மீர் மற்றும் அசாம், மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து, அருணாசலபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் ஆயுதப்படை (சிறப்பு அதிகார) சட்டம் அமலில் உள்ளது.

இதன் மூலம் சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்துவோரை ‘வாரண்டு’ இன்றி கைது செய்யலாம். அனுமதியின்றி சோதனை செய்யலாம். துப்பாக்கி சூடு நடத்தலாம் போன்ற அதிகாரங்களை இச்சட்டம் வழங்குகிறது.

கடந்த 4-ந்தேதி நாகாலாந்தில் பயங்கரவாதிகள் என்று நினைத்து சுரங்க தொழிலாளர்கள் பயணம் செய்த வாகனம் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பலரும் குரல் கொடுக்க தொடங்கினர்.

இதையடுத்து நாகாலாந்தில் இச்சட்டத்தை திரும்ப பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் விவேக் ஜோஷி தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 45 நாட்களுக்குள் அறிக்கை அளிக்கும் எனவும், அதன் அடிப்படையில் சட்டத்தை ரத்து செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், நாகாலாந்து மாநிலத்தை தொந்தரவுகள் மற்றும் ஆபத்து நிறைந்த மாநிலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை மேலும் 6 மாத காலம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இது நேற்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story