ஒமைக்ரான் இயற்கையான தடுப்பூசியாக செயல்பட்டு கொரோனாவுக்கு முடிவு கட்டுமா? - நிபுணர்கள் கருத்து


ஒமைக்ரான் இயற்கையான தடுப்பூசியாக செயல்பட்டு கொரோனாவுக்கு முடிவு கட்டுமா? - நிபுணர்கள் கருத்து
x
தினத்தந்தி 3 Jan 2022 2:30 AM GMT (Updated: 3 Jan 2022 2:30 AM GMT)

ஒமைக்ரான் வைரஸ், இயற்கையான தடுப்பூசியாக செயல்பட்டு கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருமா என்பது பற்றி நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 24-ந் தேதி கண்டறியப்பட்டது, உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ். இது கவலைக்குரிய திரிபு என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இந்த வைரசின் ஸ்பைக் புரதத்தில் 30-க்கும் மேற்பட்ட உருமாற்றங்கள் இருப்பது ஆபத்தானதாக கூறப்படுகிறது.

இதனால் உலக நாடுகள், இந்த வைரஸ் பெயரைக் கேட்டாலே அலறத்தொடங்கின. உலக நாடுகள் பலவும் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்கத்தொடங்கின. ஆனாலும் இந்தியா உள்பட 110 நாடுகளில் ஒமைக்ரான் தன் பாதச்சுவடுகளைப் பதித்து விட்டது.

ஒமைக்ரானைப் பொறுத்தமட்டில், இரண்டாவது அலையில் முக்கிய பங்கு வைத்த டெல்டா வைரசை விட லேசானது, தீவிரமான பாதிப்பையோ, ஆஸ்பத்திரிகளில் சேர்க்கும் நிலையையோ, மரணத்தை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதுதான் இயல்பான நிலையாகவும் உள்ளது.

ஆனாலும் இந்த ஒமைக்ரான் மிக வேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டிருக்கிறது. அதிகமாக பரவுகிற தன்மையைக் கொண்டிருந்தாலும், லேசான பாதிப்பையே ஏற்படுத்துவதால் ஒமைக்ரான், இயற்கையான தடுப்பூசி போல செயல்படும், அதிகம் பேருக்கு பரவுகிறபோது, அவர்களுக்கு எதிர்ப்புச்சக்தி உருவாகி விடும். இதனால் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிடும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. 

சமீபத்தில் மராட்டிய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், ஒமைக்ரான் வைரஸ் இயற்கையான தடுப்பூசியாக செயல்படும், இது கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர உதவும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதுபற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்.

சாகீத் ஜமீல் (பிரபல நச்சுயிரியல் நிபுணர்):-

ஒமைக்ரான் இயற்கையான தடுப்பூசி என பொறுப்பற்றவர்கள்தான் ஆபத்தான யோசனைகளை பரப்புகிறார்கள். இது மனநிறைவை வளர்க்கிறது. இந்த நேரத்தில் கிடைக்கிற ஆதாரங்களை விட, தொற்றுநோய் சோர்வு மற்றும் அதிகமாக செயல்படவிடாமைக்கு வேரூன்ற வைத்து விடும். 

இந்தியாவை எடுத்துக்கொண்டால், இங்கு ஊட்டச்சத்து குறைபாடு, காற்று மாசு, நீரிழிவு நோய் அதிகமாக உள்ள நிலையில், ஒரு வைரசால் மக்களை மனநிறைவு அடைந்து வெளிப்படுத்த அனுமதிப்பது நல்லதோர் அறிவியலும் அல்ல, பொது சுகாதாரமும் கிடையாது.

கிரிதர ஆர்.பாபு (வாழ்க்கைமுறை தொற்றுநோயியல் நிபுணர்):-

எப்படி இருந்தாலும், லேசான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒமைக்ரான், ஒரு தடுப்பூசி அல்ல. இந்த உருமாறிய வைரசாலும் ஆஸ்பத்திரி சேர்க்கைகள் நடக்கின்றன. மரணங்கள் ஏற்படுகின்றன. எனவே தவறான தகவல்களில் இருந்து விலகி இருங்கள். தடுப்பூசியுடன் ஒப்பிடுகையில், இயற்கையான தொற்று மரணத்தில் இருந்தும், ஆஸ்பத்திரி சேர்க்கையில் இருந்தும் பாதுகாக்க முடியாது. ஆதாரங்கள்தான் முக்கியமே தவிர கருத்துகள் அல்ல.

சூச்சின் பஜாஜ் (உஜாலா சிக்னஸ் குழும ஆஸ்பத்திரிகள் நிறுவனர்):-

மிக லேசான தொற்றுக்கு பின்னரும், நுரையீரல் தவிர்த்து இதயம், மூளை, சிறுநீரகம் போன்ற பல்வேறு உறுப்புகளிலும் இது 6 மாதங்களுக்கு மேலாக நீடிப்பதைக் காண முடியும். எனவே நீண்ட கால விளைவுகள் என்னவென்று கூற முடியாது. எனவே இந்த வைரசை தடுப்பூசியாக நாம் உண்மையிலேயே கருத முடியாது. இது தடுப்பூசி அல்ல. டெல்டாவை விட லேசானதாக இருக்கலாம். ஆனால கவனமாக இருக்க வேண்டும்.

யாஷ் ஜாவேரி (அவசர கால மருத்துவ நிபுணர்):-

ஒமைக்ரானின் அதிக பரவும் தன்மை, லேசான பாதிப்பு, பெருந்தொற்றை நிறுத்த உதவலாம். அதன் விளைவாக ஒட்டுமொத்த சமூகமும் பாதுகாக்கப்படலாம். ஒமைக்ரான் மருந்்து எதிர்ப்புச்சக்தியை பெருக்கலாம். இதனால் தொற்று நோய் பரவல் நிற்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா, “தடுப்பூசி மற்றும் இயற்கை நோய்த்தொற்றின் விளைவாக உருவான கலப்பு நோய் எதிர்ப்புச்சக்தி கொரோனா மற்றும் அதன் திரிபுகளுக்கு எதிராக வலுவான பதிலளிப்பாக மாறும்” என கூறியது நினைவுகூரத்தக்கது.

Next Story