பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் தொடர விரும்பவில்லை கேரள கவர்னர் கோபம்


பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் தொடர விரும்பவில்லை கேரள கவர்னர் கோபம்
x
தினத்தந்தி 4 Jan 2022 10:47 AM GMT (Updated: 4 Jan 2022 10:47 AM GMT)

பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் தொடர விரும்பவில்லை என்று முடிவு செய்துள்ளேன் என கேரள கவர்னர் தெரிவித்துள்ளார்.

கொச்சி,

கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கவர்னராக ஆரிப் முகமதுகான் உள்ளார். பல்கலைக்கழக வேந்தராகவும் இருக்கிறார். பல்கலைக்கழகங்களில் அரசியல் தலையீட்டை எதிர்த்து வருவதால், அவருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.

ஆவேசம் அடைந்த ஆரிப் முகமது கான், பல்கலைக்கழக வேந்தருக்கான அதிகாரத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக கூறினார்.

இந்தநிலையில் கேரள பல்கலைக்கழகம் சார்பில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க வேந்தர் என்ற முறையில் ஆரிப் முகமது கான் சிபாரிசு செய்ததாகவும், அதை கேரள அரசு நிராகரித்து விட்டதாகவும் தகவல் வெளியானது.இது சட்டவிரோதமான சிபாரிசு என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ஆரிப் முகமது கானிடம் இந்த சிபாரிசு குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-

இந்த பொறுப்பற்ற, அறியாமைமிக்க அறிக்கைகள் குறித்து நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. சிபாரிசுகளை பொறுத்தவரை பல்கலைக்கழக அதிகாரவரம்புக்கு உட்பட்டும், வேந்தர் என்ற அதிகாரவரம்புக்கு உட்பட்டும் செய்யப்படுகிறது.

ஜனாதிபதி, கவர்னர் ஆகிய பதவிகள், தேசிய அமைப்புகள். அவற்றின் கண்ணியத்துக்கு ஊறு விளைவிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன, பல்கலைக்கழகங்களில் அரசியல் தலையீட்டை கட்டுப்படுத்த கவர்னருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சட்டத்தை உருவாக்கியவர்களே அதை உடைத்தால், நான் வேந்தர் பொறுப்பில் தொடர்வதில் அர்த்தம் இல்லை.

மேலும், சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து என்னை விலக்க வேண்டும். முதல்-மந்திரியை பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் நியமிக்கலாம். அதற்கான அரசாணையை அரசு கொண்டு வரட்டும். உடனே கையெழுத்திடுகிறேன்.

நிச்சயமாக ஏதோ நடந்துள்ளதால் தான் நான் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் தொடர விரும்பவில்லை என்று முடிவு செய்தேன். ஆனால் நான் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க மாட்டேன், ஏனெனில் இது தேசிய நிறுவனங்களை உள்ளடக்கியது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story