காங்கிரஸ் பாதயாத்திரை; அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது ஏன்? - கர்நாடக ஐகோர்ட்டு கேள்வி


காங்கிரஸ் பாதயாத்திரை; அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது ஏன்? - கர்நாடக ஐகோர்ட்டு கேள்வி
x

மேகதாது பாதையாத்திரை விவகாரம் தொடர்பாக மாநில காங்கிரஸ் மற்றும் மாநில அரசு 2 நாட்களில் பதிலளிக்க கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

மேகதாது திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி பாதயாத்திரையை கடந்த 9-ந் தேதி தொடங்கி நடத்தி வருகிறது. இது வருகிற 19-ந் தேதி பெங்களூரு பசவனகுடியில் நிறைவடைகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் காங்கிரஸ் பாதயாத்திரை நடத்துவது சரியல்ல என்று அரசு கூறியுள்ளது. இந்த பாதயாத்திரையை கைவிட வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் இதை காங்கிரஸ் நிராகரித்துவிட்டது. அரசு விதித்த தடை ஆணையை மீறி இந்த பாதயாத்திரை நடந்து வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,  கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி விதிமுறைகளை மீறி பாதயாத்திரை நடத்தி வருகிறது. இதனால் வைரஸ் தொற்று பரவல் தீவிரமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் இந்த பாதயாத்திரைக்கு தடை விதிக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது. 

இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், காங்கிரஸ் கட்சியினர் முறையாக அனுமதி பெற்று தான் இந்த பாதயாத்திரையை நடத்துகிறார்களா? யாரிடம் இதற்கு அனுமதி பெற்றார்கள்? தற்போதைய கொரோனா சூழலில் எந்த விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். 

இது தொடர்பாக மாநில காங்கிரஸ் கட்சி வரும் 14 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதே சமயம் அரசு தரப்பிற்கும் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இது போன்ற கொரோனா சூழலில் பாதயாத்திரைக்கு எவ்வாறு அனுமதி வழங்கினீர்கள்? ஒருவேளை அனுமதி வழங்கவில்லை என்றால் பாதயாத்திரையை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது ஏன்? என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு மாநில அரசு வரும் 14 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் நிதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

Next Story