கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த 1.47 லட்சம் குழந்தைகள்: சுப்ரீம் கோர்ட்டில் தகவல்


கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த 1.47 லட்சம் குழந்தைகள்:  சுப்ரீம் கோர்ட்டில் தகவல்
x
தினத்தந்தி 16 Jan 2022 10:04 PM GMT (Updated: 16 Jan 2022 10:04 PM GMT)

கொரோனா காலத்தில் 1.47 லட்சம் குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர் என சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.





புதுடெல்லி

கொரோனா பாதிப்பு மற்றும் பிற நோய்களால் 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல், 1.47 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், நாட்டில் கொரோனா தொற்று 2020 மார்ச்சில் பரவ துவங்கியது. 2020 ஏப்ரல் முதல் தற்போது வரை, கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய்களால் 1.47 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள், தாயையோ, தந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளனர். இதில் 76 ஆயிரத்து 508 பேர் சிறுவர்கள்.  70 ஆயிரத்து 980 பேர் சிறுமியர். நான்கு பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். ஒடிசா மாநிலத்தில் தான் அதிகபட்சமாக 24 ஆயிரத்து 405 குழந்தைகள் பெற்றோரை இழந்து உள்ளனர். மராட்டியத்தில் 19 ஆயித்து 623 குழந்தைகளும், குஜராத்தில் 14 
ஆயிரத்து 770 குழந்தைகளும், தமிழகத்தில் 11 ஆயிரத்து 14 பேரும் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளனர் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 19ந்தேதி முதல், வடகிழக்கு மாநிலங்களுடன் காணொலி காட்சி வழியே கூட்டம் ஒன்று நடத்தப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.


Next Story