குடியரசு தின விழா - தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு அனுமதி இல்லை


2020 குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி (கோப்பு படம்)
x
2020 குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி (கோப்பு படம்)
தினத்தந்தி 17 Jan 2022 7:42 AM GMT (Updated: 2022-01-17T13:35:38+05:30)

இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஊர்திக்கு அனுமதி இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின (ஜன.26) நிகழ்வின் போதும் பல்வேறு மாநிலங்களின் சார்பில் ஒவ்வொரு மையக்கருவின் அடிப்படையில் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். அந்த வகையில் இந்த ஆண்டு 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற இருப்பதால் இந்த ஆண்டுக்கான மையக்கருவாக சுதந்திர போராட்ட வீரர்கள் என்ற மையக்கரு தேர்வு செய்யப்பட்டது. 

இந்த சூழ்நிலையில் கொரோனா காரணமாக இந்த ஆண்டு 12 மாநிலங்களின் அணிவகுப்பு வாகனங்கள் மட்டுமே பங்கேற்க மத்திய அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் தமிழ்நாட்டின் சார்பிலான அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்படவில்லை.

தமிழ்நாட்டில் இருந்து விடுதலை போராட்ட வீரர்களான வேலுநாச்சாயார், வ.உ.சிதம்பரனார், பாரதியார் ஆகியோரின் படங்கள் இடம்பெறும் வகையிலான அலங்கார ஊர்தி அமைக்கப்படும் என மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு சார்பில் முன்மொழிவு கொடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் தமிழ்நாடு சார்பிலான அந்த அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்படவில்லை. தமிழ்நாடு மட்டுமின்றி தென் இந்தியாவில் இருந்து வேறு எந்த மாநிலத்தின் அலங்கார ஊர்தியும் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால், பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவில் இருந்து அலங்கார ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, மேற்குவங்காளத்தில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ரவிந்திரநாத் தாகூர் போன்ற விடுதலை போராட்ட வீரர்களை சித்தரிக்கும் வகையிலான அலங்கார ஊர்திக்கு முன்மொழிவு கொடுக்கப்பட்டதாகவும் அந்த அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்படாதது வருத்தமளிப்பதாக மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

பொதுவாக, ஒவ்வொரு ஆண்டு குடியரசு தின நிகழ்ச்சியின் போதும் எல்லா மாநிலங்களின் அலங்கார அணி வகுப்பு வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை. சில குறிப்பிட்ட மாநிலங்களின் அணிவகுப்பு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இந்த அணிவகுப்பு வாகனங்களின் தேர்வை மேற்கொள்வது மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிபுணர் குழு ஆகும்.

மாநிலங்கள் வழங்கும் பரிந்துரை மற்றும் முன்மொழிவு அடிப்படையில் இந்த ஆண்டு மொத்தம் 12 மாநிலங்களின் அணிவகுப்பு வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களின் அலங்கார வாகனங்கள் குடியரசு தின விழாவில் அணிவகுக்க தேர்வு செய்யப்படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story