தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்றது சுப்ரீம் கோர்ட்...!


தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்றது சுப்ரீம் கோர்ட்...!
x
தினத்தந்தி 19 Jan 2022 8:28 AM GMT (Updated: 19 Jan 2022 8:28 AM GMT)

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளின் நிபந்தனையற்ற மன்னிப்பை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றது.

புதுடெல்லி,

தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை பதவி உயர்வை டிஎன்பிஎஸ்சி மதிப்பெண் அடிப்படையிலேயே வழங்க என்ற உத்தரவை அமல்படுத்தாத வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றாவாளிகள் என அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளான விஜயகுமார், ஸ்வர்னா, நந்தகுமார், மணிவாசகன், சண்முகம், பிரபாகர் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் எச்சரிக்கை விதித்துள்ளது.

மேலும், இதுபோன்ற நீதிமன்ற உத்தரவுகளை இனி முழுவீச்சில் அமல்படுத்த எச்சரிக்கை விடுத்ததுடன், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை இனி முழுவீச்சில் அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கி தமிழ்நாடு அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்துள்ளது.

தமிழ்நாடு அரசில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சட்டத்தின் படி, பதவி உயர்வு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நடத்தப்படும் என்ற சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரி பொதுப்பணித்துறை ஊழியர்களான செந்தூர் மற்றும் ராஜா தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு விசாரித்தது.

டிஎன்பிஎஸ்சி மதிப்பெண் முறையில் சினீயாரிட்டி பட்டியலை தயாரித்து அதன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்காமல் இடஒதுக்கீடு முறையில் பதவி உயர்வு வழங்கினால் ஏற்கனவே உள்ள இடஒதுக்கீட்டின் அளவு அதிகரித்து விடும் என்று அந்த சட்டப்பிரிவுகளை ஐகோர்டு ரத்து செய்தது.

இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு தமிழ்நாடு அரசிற்கு ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் சீனியாரிட்டி கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் 8 வாரத்திற்குள் பதவி உயர்வை வழங்க வேண்டும் என கடந்த 2020 செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.

இருப்பினும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்தவில்லை என தெரிவித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதில், தமிழ்நாடு அரசின் 5 உயர் அதிகாரிகளும், 4 தலைமை பொறியாளர்களும் குற்றவாளிகள் என கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி அறிவித்தது. 

மேலும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை 12 வாரத்திற்குள் அமல்படுத்த வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்திருந்தது.

இதையடுத்து, தமிழ்நாடு அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தமிழ்நாடு அரசு அமல்படுத்திவிட்டது, தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் தற்போது நிபந்தனையற்ற மன்னிப்பை கோருகின்றனர். எனவே, அவர்களின் நிபந்தனையை ஏற்று இந்த வழக்கை முடித்துவைக்க வேண்டும் என வாதிட்டனர்.

ஆனால், மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிமன்ற அவமதிப்பை செய்த இந்த அதிகாரிகளை ஒரு மாதம் சிறைக்கு அனுப்ப வேண்டும் என வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் பரீசிலித்த நீதிபதிகள் தமிழ்நாடு உயர் அதிகாரிகளின் அந்த மன்னிப்பை ஏற்று கடும் எச்சரிக்கையுடன் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர். உயர் அதிகாரிகள் 2016 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் பணியாற்றியவர்கள் ஆவர்.

இந்த விவகாரத்தை பொறுத்தவரை ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தமிழ்நாடு அரசு அமல்படுத்திவிட்டது. குறிப்பாக, பொதுப்பணித்துறையில் ஏற்கனவே சீனியாரிட்டி முறை கணக்கிடப்பட்டு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்கனவே அமல்படுத்திவிட்டோம் என்ற தகவலை தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

எனவே இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை பொறுத்தவரை, இனி சீனியாரிட்டி கணக்கிடும்போது டிஎன்பிஎஸ்சி மதிப்பெண் மதிப்பெண் அடிப்படையில் தான் பதவி உயர்வை கணக்கிடவேண்டும் என்பதை சுப்ரீம் கோர்ட்டு தெள்ளத்தெளிவாக தெளிவுபடுத்திவிட்டது. அந்த தீர்ப்பை தமிழ்நாடு அரசும் செயல்படுத்திவிட்டது. அதில், சில குறைகளும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இன்று விசாரிக்கப்பட்ட விவகாரம் என்பது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விவரங்களை அறிவிப்பதாக இருந்தது. 

இனி வரும் காலங்களில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் சீனியாரிட்டியை கணக்கிடும்போது டிஎன்பிஎஸ்சி மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இனி பதவி உயர்வு கணக்கிடப்படவேண்டும். இதனை தொடர்ந்து இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்துவைத்தது.


Next Story