கோவாவில் 60 சதவீத எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவி சாதனை


கோவாவில் 60 சதவீத எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவி சாதனை
x
தினத்தந்தி 22 Jan 2022 8:16 PM GMT (Updated: 22 Jan 2022 8:16 PM GMT)

குட்டி மாநிலமான கோவாவில் 60 சதவீத எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவி சாதனை படைத்துள்ளனர்.

கோவா சட்டசபை சாதனை

குட்டி மாநிலமான கோவாவில் கடந்த 2017 சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபை அமைந்தது. 40 இடங்களை கொண்ட சட்டசபையில் 17 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வந்தது.

ஆனால் 13 இடங்களை பிடித்த பா.ஜ.க., குட்டிக்கட்சிகள், சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. மனோகர் பாரிக்கர் முதல்-மந்திரி ஆனார். ஆனால் அவர் 2019-ல் மரணம் அடைந்தபின்னர் பிரமோத் சவந்த் முதல்-மந்திரி பதவிக்கு வந்தார்.

24 எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவல்

இதற்கிடையே 5 ஆண்டு காலத்தில் 24 எம்.எல்.ஏ.க்கள், அதாவது 60 சதவீதத்தினர் கட்சி தாவி உள்ளனர். இப்படி இதுவரை இந்தியாவில் வேறு எங்கும் நேர்ந்தது இல்லை.

இதைக் கண்டறிந்துள்ள ஜனநாயக சீர்திருத்த சங்கம் தனது அறிக்கையில், “இது வாக்காளர்களின் தீர்ப்புக்கு முற்றிலும் அவமரியாதை ஆகும். இது நெறிமுறைகள், ஒழுக்கம் ஆகியவற்றுக்கான ஒரு மோசமான அணுகுமுறை. மேலும் இந்த மாநிலம், கட்டுப்பாடற்ற பேராசையால் மிக மோசமான நிலையில் உள்ளது” என சாடி உள்ளது.

24 எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவலில், 2017-ம் ஆண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விஸ்வஜித் ரானே, சுபாஷ் சிரோத்கர், தயானந்த் சாப்டே ஆகியோர் பா.ஜ.க.வில் சேர்ந்தது சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தாவல்கள்

2019-ம் ஆண்டு, எதிர்க்கட்சி தலைவர் சந்திரகாந்த் காவேல்கர் தலைமையில் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவியது முக்கிய அம்சம்.

மராட்டியவாடி கோமந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும் அதே கால கட்டத்தில் பா.ஜ.க.வுக்கு தாவினர்.

ஜெயேஷ் சால்கோவாங்கர் என்ற கோவா பார்வர்டு கட்சி உறுப்பினரும் பா.ஜ.க.வுக்கு தாவியவர்தான்.

சமீபத்தில்கூட கோவா முன்னாள் முதல்-மந்திரி ரவி நாயக் (காங்கிரஸ்) பா.ஜ.க.வுக்கு தாவி உள்ளார்.

இப்படி கட்சி தாவலுக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாக கோவா மாநிலம் திகழ்கிறது.

அக்னி பரீட்சை

அங்கு அடுத்த மாதம் 14-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. கட்சி மாறிய அரசியல்வாதிகளுக்கு இது அக்னி பரீட்சையாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்பது அரசியல் நோக்கர்கள் கருத்தாக அமைந்துள்ளது.


Next Story