ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள்: தெலுங்கு வருடப் பிறப்பன்று அதிகாரபூர்வ அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 Jan 2022 8:59 PM GMT (Updated: 26 Jan 2022 8:59 PM GMT)

ஆந்திர மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையை 26-ஆக அதிகரிக்க அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

அமராவதி, 

ஆந்திராவில் தற்போது 13 மாவட்டங்கள் உள்ளன. அவற்றைப் பிரித்து மேலும் 13 மாவட்டங்களை உருவாக்க அம்மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. 

இதனால் ஆந்திராவில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 26 ஆக உயரும். குடியரசு தினத்தையொட்டி உரையாற்றிய மாநில கவர்னர் பிஷ்வபூஷண் ஹரிசந்தன், புதிதாக 13 மாவட்டங்கள் உருவாக்கப்படுவதையும், அவை இந்த ஆண்டு ஏப்ரல் 2-ந் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு தினமான உகாதி அன்று தொடங்கப்படுவதையும் தெரிவித்தார்.

முன்னதாக ஆந்திராவில் நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவந்தநிலையில், அம்மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி புதிதாக உருவாகவிருக்கும் 13 புதிய மாவட்டங்கள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டார். 

ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதியையும் ஒரு மாவட்டமாக உருவாக்க வேண்டும் என ஜெகன்மோகன் ரெட்டி திட்டம் தீட்டியிருந்த நிலையில், தற்போது புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படவிருக்கின்றன. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தெலுங்கு வருடப் பிறப்பு அன்று வெளியாகும் என்று கூறப்பட்டது. 

அண்மையில் ஒரு மாவட்டத்துக்கு ஒரு விமான நிலையம் என்ற திட்டத்தை ஆந்திர அரசு நடைமுறைக்குக் கொண்டுவர திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




Next Story