முதலீடு செய்வதற்கு இதுவே சரியான தருணம்; தொழில் துறையினருக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு
புதிய துறைகளில் மகத்தான வாய்ப்புகள் இருக்கின்றன; முதலீடு செய்வதற்கு இதுவே சரியான தருணம், இந்த வாய்ப்பை தொழில்துறையினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார்.
மூலதன செலவினம் அதிகரிப்பு
தலைநகர் டெல்லியில் சி.ஐ.ஐ. என்னும் இந்திய தொழில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மத்தியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தனியார் முதலீட்டில் நீடித்த வளர்ச்சிக்கும், சந்தையை விரிவுபடுத்த நிலையான முதலீட்டை ஊக்குவிக்கவும் பட்ஜெட்டில் மூலதன செலவினத்தை அரசு அதிகரித்துள்ளது.
இதுவே சரியான தருணம்...
முதலீடு செய்வதற்கு இது சரியான தருணம். இந்த வாய்ப்பை தொழில்துறையினர் இழக்கக்கூடாது.
கொரோனா தொற்றுநோய்க்கு பின்னர் அனைத்து மறுசீரமைப்புகளும் நடக்கின்றன. உங்கள் தொழிலை நீங்கள் செய்யும் வழிகளில் மீட்டமைக்கலாம். 15 சதவீத பெருநிறுவன வரி சலுகை அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பல துறைகள் திறக்கப்பட்டுள்ளன. புதிய துறைகளில், மொத்த மருந்து, தடுப்பூசிகள் மற்றும் மரபணு போன்ற புதிய சகாப்த துறைகளில் மகத்தான வாய்ப்புகள் இருக்கின்றன.
2 வங்கிகள் தனியார்மயம்
அமைதியாக உட்கார்ந்து ஒரு முடிவு எடுங்கள். நமது நாட்டுக்கு திறன் விரிவாக்கம் தேவை. அதுவே நல்லதொரு சுழற்சியைத் தொடங்கப்போகிறது.
உங்களுக்கு முன் உள்ள அந்த பகுதிகளுக்கு நான் பச்சைக்கொடி காட்ட விரும்புகிறேன். இதில் தொழில்துறையினர் சேரவும், நல்ல சுழற்சியில் பங்கெடுக்கவும் அழைப்பு விடுக்கிறேன்.
அரசு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான தனது முதலீட்டை விட்டுவிடவில்லை. அது முக்கிய தொழில்களில் நேரடியாகவும், விரைவாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உலகளாவிய மதிப்புச்சங்கிலிகள் ஒரே இடத்தில் குவிந்து விடப்போவதில்லை. ஆனால் சட்டத்தின் ஆட்சி நடக்கிற, ஆங்கிலம் பேசுகிற நாடுகளுக்கு இடம் பெயர்ந்து கொண்டிருக்கும் உலகளாவிய அரங்கம் திறக்கப்படுகிறது. இந்தியா அதற்கு நன்றாக பொருந்துகிறது. இந்த உலகளாவிய மாற்றத்தை தொழில்துறை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
2 பொதுத்துறை வங்கிகளையும், ஒரு பொது காப்பீட்டு நிறுவனத்தையும் தனியார் மயமாக்க கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த தனியார்மயமாக்கலை முன்னோக்கி கொண்டு செல்ல அரசு உறுதி பூண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story