துபாயில் இருந்து கேரளா திரும்பிய பினராயி விஜயனுக்கு எதிராக கருப்புக்கொடி
துபாயில் இருந்து கேரளா திரும்பிய முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு பா.ஜ.க. கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் சிகிச்சைக்காக 3 வாரங்களுக்கு முன் அமெரிக்கா சென்றார். உடன் அவரது மனைவியும் சென்றார். அமெரிக்காவில் சிகிச்சை முடிந்த பின் கடந்த மாத இறுதியில் அவர் கேரளா திரும்புவார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், திடீரென அவரது பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அமெரிக்காவில் இருந்து நேராக அவர் துபாய் புறப்பட்டு சென்றார். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்த அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், நேற்று மதியம் அவர் துபாயில் இருந்து கண்ணூர் வந்தார். விமான நிலையத்தில் இருந்து காரில் தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது திடீரென வழியில் திரண்டிருந்த பா.ஜ.க. இளைஞர் அணியான யுவ மோர்ச்சா தொண்டர்கள் அவரது கார் முன் பாய்ந்து கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா, கடத்தலுக்கு பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் உதவி செய்தார் என்று கூறியிருந்தார். மேலும், அவரது தூண்டுதலினால் தான் தங்க கடத்தலில் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக கூற வேண்டும் என அமலாக்க துறையினர் கட்டாயப்படுத்துவதாக பொய் சொன்னேன் என்றும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து தான் பா.ஜ.க. இளைஞர் அமைப்பினர் பினராயி விஜயனுக்கு எதிராக கருப்புக்கொடி காண்பித்து போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story