உலக அளவில் இந்தியா செயல்படுத்தும் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம்..!! - மன்சுக் மாண்டவியா பெருமிதம்
உலக அளவில் இந்தியா மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதாக சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
தடுப்பூசிக்கான ‘இந்திரதனுஷ் தீவிரப்படுத்தல் திட்டம் (ஐ.எம்.ஐ.) 4.0’ நிகழ்ச்சியை மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று காணொலி முறையில் தொடங்கி வைத்தார்.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார அதிகாரிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, இந்தியாவின் தடுப்பூசி திட்டம் குறித்து பெருமிதம் வெளியிட்டார்.
அவர் கூறும்போது, ‘உலக அளவில் இந்தியா, மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த சர்வேதச நோயெதிர்ப்பு திட்டம் மூலம் ஆண்டுக்கு 3 கோடிக்கு அதிகமான கர்ப்பிணிகள், 2.6 கோடி குழந்தைகள் பலன் பெறுகின்றனர்’ என தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் வழக்கமான தடுப்பூசி பணிகளின் வேகம் மந்தமானதை சுட்டிக்காட்டிய மாண்டவியா, இந்த இடைவெளியை நிரப்புவதில் ஐ.எம்.ஐ. 4.0 பெரும் பங்களிப்பை வழங்கும் எனவும் தெரிவித்தார்.
3 சுற்றுகளை கொண்ட ஐ.எம்.ஐ. 4.0, 33 மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 416 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story