பர்தா விவகாரம்: ‘மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க வேண்டாம்’ - கர்நாடக முதல்-மந்திரி வேண்டுகோள்!
பர்தா விவகாரம் தொடர்பான வழக்கை கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று விசாரணை செய்கிறது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் (மேல்நிலைப்பள்ளி), முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் (பர்தா) அணிய தடை விதித்து அக்கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார். இதை கண்டித்து அந்த மாணவிகள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முஸ்லிம் மாணவிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு போட்டு வந்தனர். அதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்திய எல்லையை தாண்டி பிற நாடுகளிலும் இதுகுறித்து பேசப்படுகிறது.
இதற்கிடையே முஸ்லிம் மாணவிகள் 6 பேர், கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து, தங்களை ஹிஜாப் அணிந்து அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட கோரியுள்ளனர். இந்த மனு மீது நேற்று முன்தினம் ஐகோர்ட்டில், தனி நீதிபதி கிருஷ்ண தீட்சித் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி, கர்நாடக மாநில அரசின் சீருடை திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று விசாரணை செய்கிறது.
இதற்கிடையே பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பர்தா விவகாரம் தொடர்பாக கூறுகையில்,
“வெளியாட்கள், பள்ளி வளாகங்கள் மற்றும் மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன். நீதி கிடைக்க அமைதியான சூழலை உருவாக்குவது நமது கடமை” என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story