உத்தரகாண்ட், கோவா மாநில சட்டசபைகளுக்கு நாளை தேர்தல்..!
உத்தரகாண்ட் மற்றும் கோவா மாநிலத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
கோவா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் உத்தர பிரதேசத்தில், ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், முதற்கட்ட தேர்தல் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்றது. அங்கு கடைசி மற்றும் 7-வது கட்ட தேர்தல் மார்ச் மாதம் 7 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
அதே போல் மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி முதற்கட்ட தேர்தலும், மார்ச் 5 ஆம் தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20 ஆம் தேதியும், உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 14 ஆம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த சூழலில் கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் அரசியல் கட்சியினர் நேற்றைய தினம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பொதுக்கூட்டங்கள் மூலமாகவும், வீடு வீடாக சென்றும் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் செய்து வந்த நிலையில், தேர்தல் விதிகளின்படி, உத்தரகாண்ட் மற்றும் கோவாவில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது.
இந்நிலையில் கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கும், கோவாவில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. மேலும் உத்தரபிரதேசத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை 55 தொகுதிகளில் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story