போலீஸ் துறையை நவீனப்படுத்த ரூ.26 ஆயிரம் கோடி: மத்திய அரசு ஒதுக்கீடு
போலீஸ் துறை நவீனமயமாக்கல் திட்டத்தை தொடர மத்திய அரசு ரூ.26 ஆயிரத்து 275 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
புதுடெல்லி,
போலீஸ் துறையை நவீனமயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதாவது, நடப்பு 2021-2022 நிதியாண்டு முதல் 2025-2026 நிதியாண்டுவரை இத்திட்டம் நீடிக்கும். இதற்கு ரூ.26 ஆயிரத்து 275 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு, நவீன தொழில்நுட்பத்தை பின்பற்றுதல் ஆகியவற்றுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில், பாதுகாப்பு தொடர்பான செலவினங்கள், கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்கள், மாவோயிஸ்டு ஆதிக்கம் நிறைந்த மாநிலங்கள் ஆகியவற்றுக்கு இந்த ஒதுக்கீட்டில் இருந்து ரூ.18 ஆயிரத்து 839 கோடி வழங்கப்படும்.
மாநில போலீஸ் துறைகளை நவீனப்படுத்த ரூ.4 ஆயிரத்து 846 கோடி அளிக்கப்படும். மாநிலங்களில் உயர்தர தடயவியல் ஆய்வுக்கூட வசதிகளை நிறுவ ரூ.2 ஆயிரத்து 80 கோடியே 50 லட்சம் வழங்கப்படும்.
இதுதவிர, மாவோயிஸ்டு ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சிறப்பு மத்திய நிதியுதவி உள்ளிட்ட 6 திட்டங்களை செயல்படுத்த ரூ.8 ஆயிரத்து 689 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் படைப்பிரிவுகளை உருவாக்க ரூ.350 கோடிக்கும், போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைக்காக மாநிலங்களுக்கு ரூ.50 கோடிக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story