உத்தரபிரதேசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் - மம்தா பானர்ஜி!


உத்தரபிரதேசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் - மம்தா பானர்ஜி!
x
தினத்தந்தி 14 Feb 2022 9:23 PM IST (Updated: 14 Feb 2022 9:23 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசம் பாதுகாக்கப்பட்டால் ஒட்டுமொத்த தேசமும் பாதுகாக்கப்படும் என்று மம்தா பானர்ஜி கூறினார்.

கொல்கத்தா,

நாடாளுமன்ற தேர்தலில்  பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியை தோற்கடிக்க வேண்டுமெனில் மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேச மாநில தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற 4 முக்கிய நகரங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் அவருடைய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. இந்த தேர்தல் வெற்றிக்கு பின் அவர் இவ்வாறு கூறினார். அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி மாநில கட்சிகளுடன் சுமூகமான உறவை கடைபிடிப்பதில்லை. காங்கிரஸ் கட்சி அதன் வழியில் செயல்படும், நாங்கள் எங்கள் வழியில் செயல்படுவோம். கம்யூனிஸ்ட் கட்சியினரை எங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டேன். காங்கிரஸ் கட்சியினரையும் சேர்ந்து செயல்பட அழைத்தேன். அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. நான் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கவில்லை. அவர்களுடன் எதற்காக நான் சண்டையிட வேண்டும்?

தங்களை மதச்சார்பற்றவர்கள் என அடையாளம் காட்டிக்கொள்பவர்கள், மற்றவர்களுடன் இணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இப்போது நடந்து கொண்டிருப்பது, நாட்டை பயங்கரவாதம் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தில் இருந்து மீட்டெடுக்க நடைபெறும் யுத்தம் ஆகும். இந்த யுத்தம், நம் நாட்டின் வரலாறு மற்றும் அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்காக நடைபெறும் யுத்தம் ஆகும். 

சமாஜ்வாடி கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இணைந்து உத்தரபிரதேச தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியை தோற்கடிக்க முடியும்.

உத்தரபிரதேசம் பாதுகாக்கப்பட்டால் ஒட்டுமொத்த தேசமும் பாதுகாக்கப்படும்.

அகிலேஷ் யாதவுக்கு எங்களுடைய முழுமையான ஆதரவை அளித்துள்ளோம். அவருக்கு போட்டியாக அங்கு வேட்பாளர்களை நிறுத்தி அவர்களை பலவீனமாக்க முயற்சிக்கவில்லை.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Next Story